Published : 05 Mar 2025 11:02 PM
Last Updated : 05 Mar 2025 11:02 PM

புதிய வருமான வரி மசோதா: இமெயில், சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முழு அதிகாரம்

புதுடெல்லி: தனிநபர்களுக்கு சொந்தமான கணினிகள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகளை அணுக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புதிய வருமான வரி மசோதா முழு அதிகாரம் அளிக்கிறது.

வருமான வரிச் சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதா கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

இந்த புதிய மசோதா குடிமக்களுக்கான வரிச் சட்டங்களை எளிமைப்படுத்துகிறது என்று மத்திய அரசு கூறினாலும், இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள ஒரு விதி, அதிகாரிகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்குகிறது. இது வருமான வரி தொடர்பான விசாரணைகளின் போது தனிநபரின் மின்னஞ்சல்கள், வர்த்தக கணக்குகள், சமூக ஊடக சுயவிவரங்கள் உள்ளிட்டவற்றை அவரது அனுமதியின்றி ஆராய அனுமதிக்கிறது.

தற்போதைய விதிகளின்படி, ஒரு தனிநபரிடம் விசாரணை நடத்தும்போது, வருமான வரித் துறை அதிகாரிகள் அவரது லேப்டாப், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதள கணக்குகள் உள்ளிட்டவற்றை அணுக அவரிடம் அனுமதி கேட்பது அவசியம். அவர் அனுமதிக்கவில்லையென்றால் அதிகாரிகளால் உடனடியாக அவற்றை அணுக முடியாது.

ஆனால் தனிநபர் ஒருவர், வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால், அவரது தனிப்பட்ட மின்னஞ்சல், சமூக வலைதள கணக்குகளை அணுகுவதற்கான முழு அதிகாரத்தை புதிய வருமான வரி மசோதா வழங்குகிறது.

புதிய வருமான வரி மசோதாவின் பிரிவு 247-ன் படி, வருமான வரித் துறை அதிகாரிகள், வரி ஏய்ப்பு அல்லது வரி செலுத்தப்படாத, வெளியிடப்படாத சொத்துக்கள் இருப்பதாக சந்தேகித்தால், ஏப்ரல் 1, 2026 முதல் சம்பந்தப்பட்டவரின் மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள், வங்கி விவரங்கள் மற்றும் முதலீட்டு கணக்குகளை அணுக உரிமை பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய வருமான வரி சட்டம் ஏன்? - இப்போது உள்ள வருமான வரி சட்டம் 1961, கடந்த 60 ஆண்டுகளில் எண்ணற்ற திருத்தங்களைக் கண்டுள்ளது. இதன் மூலம் வருமான வரிச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானம் அதிக சுமைகளை தாங்கி விட்டது; இதன் மொழி மிகவும் சிக்கலானதாக உள்ளது; வரி செலுத்துவோருக்கு அதிக செலவு தருவதாய், நேரடி வரி நிர்வாகத்தின் திறனுக்குத் தடையாய் இருக்கிறது.

வரி நிர்வாகத்தினர், வரி நிபுணர்கள் மற்றும் வரி செலுத்துவோர், வருமான வரிச் சட்டத்தின் கட்டுமானம் மற்றும் சிக்கல்கள் குறித்து கவலை எழுப்பி உள்ளனர். ஆகவே, எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான சுருக்கமான சட்டம் உருவாக்க, வருமானவரிச் சட்டம் 1961 முழுவதுமாக மீள்பார்வை செய்யப்படும் என்று ஜூலை 2024 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

புதிய வருமான வரி சட்டத்தின் சிறப்பு: புதிய வருமான வரி சட்டம் எளிமைப்படுத்தப்பட்டதாக இருக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. மதிப்பீட்டு ஆண்டு என்பது வரி ஆண்டு எனவும், முந்தைய ஆண்டு என்பது நிதி ஆண்டு என்றும் மாற்றப்பட்டுள்ளது. வரி ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து தொடங்கும் 12 மாதங்களை குறிப்பதாகும். அதன்படி இது, நிதியாண்டின் கட்டமைப்போடு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 2024-25 நிதியாண்டில் சம்பாதித்த வருமானம் அடுத்த நிதியாண்டில் மதிப்பிடப்படுகிறது. இந்த புதிய வரிமுறையில் 2025-26 மதிப்பீட்டு ஆண்டாக இருக்கும். மேலும், மத்திய நேரடி வரிகள் வாரியம், வரி நிர்வாக விதிகளை நிறுவவும், இணக்கமான நடவடிக்கைகளை செயல்படுத்தவும், டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகளை அடிக்கடி சட்ட மாற்றங்கள் தேவையின்றி செயல்படுத்தவும் இப்புதிய மசோதா அனுமதிக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x