Published : 05 Mar 2025 05:26 PM
Last Updated : 05 Mar 2025 05:26 PM
கொடைக்கானல்: இந்தியாவுக்கு அந்நிய செலாவணி ஈட்டித்தரும் விளைபொருட்களில் காபி முதலிடம் பெறுகிறது. உலகிலேயே பெட்ரோலியத்துக்கு அடுத்ததாக 2-வது வியாபாரப் பொருளாக காபி இருக்கிறது. எத்தியோப்பியாவையும், மத்திய ஆப்பிரிக் காவையும் தாயகமாக கொண்டது காபி. இந்தியாவில் கி.பி.16-ம் நூற்றாண்டில் பாபா - புடன் என்பவரால் கொண்டு வரப்பட்ட காபி விதைகள் கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள மலைத்தோட்டத்தில் முதன்முதலாக பயிரிடப்பட்டன.
அதன்பிறகு, கி.பி.18-ம் நூற்றாண்டில் பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜியத்தால் தென் இந்தியாவில் வியாபாரரீதியாக காபி பயிரி டப்பட்டது. 18-ம் நூற்றாண்டில் அப்போதைய சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த காக்பர்ன் என்பவரால், ஏற்காடு பகுதியில் தோட்டப் பயிராக வளர்க்கப்பட்டது. 19-ம் நூற்றாண்டில் கொடைக்கானல் கீழ்பழநி மலைப் பகுதியில் முக்கிய விவசாயமாக வேரூன்றி விவசாயிகளின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த பயிராக காபி விளங்குகிறது.
தமிழகம் 3-வது இடம்: உலகில் 80 நாடுகளில் காபி சாகுபடி செய்தாலும், 50 நாடுகள் மட்டுமே காபி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உலக அளவில் காபி உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், வியட்நாம் 2-ம் இடத்திலும், இந்தோனேசியா 3-வது இடத்திலும், கொலம்பியா 4-வது இடத் திலும், எத்தியோப்பியா 5-வது இடத்திலும், இந்தியா 6-வது இடத்திலும் உள்ளன.
உலக காபி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 4 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் 4.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காபி உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 35,500 ஹெக்டேர் பரப்பளவில் காபி பயிரிடப்பட்டு தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதில் குறிப்பாக, 32,000 ஏக்கர் பரப்பளவில் அரபிக்கா ரக காபி பயிரிடப்படும் இடமாக கொடைக் கானல் கீழ்பழநி மலைப்பகுதி உள்ளது.
தனித்துவம் மிக்க காபி: தமிழகத்தில் அதிக பரப்பளவில் அராபிக்கா ரக காபி விளையும் பகுதி திண்டுக்கல் மாவட்டம், கீழ்பழநி மலைப்பகுதி ஆகும். ‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானல் கீழ்மலைக் கிராமங்களான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பூலத்தூர், காமனூர், கே.சி.பட்டி, பாச்சலூர், ஆடலூர், பன்றிமலை பகுதியில் காபி அதிகளவில் சாகுபடியாகிறது. 18,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காபி சாகுபடியில் ஈடு பட்டுள்ளனர்.
அறுவடை செய்த பழுத்த காபியை தோல் நீக்கி, கழுவி சுத்தம் செய்து கொட்டைகளை தனியாக பிரித்தெடுத்து வெயிலில் காயவைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். நறுமணம், ரசித்து ருசிக்க வைக்கும் சுவையால் இங்கு விளையும் காபிக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் தனி மவுசு உள்ளது. காபி விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க, தாண்டிக்குடியில் மண்டல காபி ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காபியில் 2 வருமானம்: இதுகுறித்து தாண்டிக்குடியைச் சேர்ந்த காபி வாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் கூறியதாவது: 1940-ல் நடந்த 2-ம் உலகப்போரால் ஏற்பட்ட பாதிப்பால் இந்திய காபி தொழில் நலிவடைந்து, விலை மிகவும் குறைந்து காபி விவசாயம் அழிவை சந்திக்கும் நிலையில் இருந்தது. 1942-ல் இந்திய காபி வாரியம் உருவாக்கப்பட்டது.
முதலில் காபி வாரியத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து காபியை கொள்முதல் செய்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டது. 1996-ல் உலகமயமாக்கத்துக்கு பிறகு ஏற்பட்ட, தாராள மயமாக்கல் கொள்கையால் காபி வாரியத்தின் விற்பனை கட்டுப்பாடு விலக்கி கொள்ளப்பட்டது. இந்திய காபிக்கு குறிப்பாக தமிழகத்தில் விளையும் அராபிக்கா காபிக்கு உலக அளவில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
ஊடு பயிர்களாலும் வருமானம்: குறிப்பாக மலையில் உயரத்தில் விளைவிப்பது, நிழலில் காபி வளர்ப்பது, கைகளால் பறிப்பது, சூரிய ஒளியில் உலர வைப்பது, இயற்கையோடு ஒன்றியுள்ளது என்று தனித்துவம் மிக்க காபி கொடைக்கானல் கீழ்பழநி மலை காபி தான். காபி வருமானத்தோடு, காபியில் ஊடு பயிராக மலை வாழை, அவகோடா, மிளகு போன்ற பயிர்கள் சாகுபடியிலும் வருமானம் என 2 வருமானம் தரக்கூடியதாக காபி விவசாயம் உள்ளது.
காபி வாரியம் அதிக அளவில் மானியம் வழங்குகிறது. தற்போது, காபியின் விலையில் முன்னேற்றம் அடைந்திருப்பது விவசாயிகளுக்கு ஊக்கத்தை கொடுத்து, காபி பயிரிடும் பரப்பளவு அதிகரித்து வருகிறது. பருவநிலை மாற்றம், தொழிலாளர் பற்றாக்குறை, உர விலை உயர்வு என பல்வேறு இடர்பாடுகள் இருப்பினும், நறுமணம், சுவையில் தனித்துவம் வாய்ந்த மற்றும் இயற்கையோடு இணைந்து காபி சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு ஆர்வம் குறையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT