Published : 05 Mar 2025 07:36 AM
Last Updated : 05 Mar 2025 07:36 AM
புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகளில் அதிக விலைக்கு மருந்துகள் விற்கப்படுவதை தடுக்க மாநில அரசுகள் புதிய விதிகளை வரையறுத்து முறையாக அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
டெல்லியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் விஜய் பால் டால்மியா. இவரது மனைவி நீலம். இத்தம்பதியின் மகன் சித்தார்த் டால்மியா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீலத்துக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அப்போது நீலத்துக்கு நாள்தோறும் விலைஉயர்ந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டது. ஒரு ஊசி மருந்தின் விலை ரூ.61,132 ஆகும். இதே மருந்தை வெளிச்சந்தையில் ரூ.40,000-க்கு வாங்க முடியும். ஆனால் தங்களது மருந்தகத்தில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்புடன் கூறியது. இதனால் நீலத்தின் மருத்துவச் செலவு கணிசமாக அதிகரித்தது.
இந்த பிரச்சினை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் விஜய் பால் டால்மியாவும் அவரது மகனும் இளம் வழக்கறிஞருமான சித்தார்த் டால்மியாவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், "தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் தங்கள் மருந்தகங்களில் மட்டுமே மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்களை வாங்க நிர்பந்தம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அனைத்து தரப்பு தரப்பு நோயாளிகளுக்கும் குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ய வேண்டும்" என்று கோரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “தனியார் மருத்துவமனை, மருந்தகங்களில் மட்டுமே நோயாளிகள் மருந்துகளை வாங்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. விருப்பப்பட்ட அரசு, தனியார் மருந்தகங்களில் நோயாளிகள் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டது. பல்வேறு மாநில அரசுகள் சார்பிலும் இதே கருத்தை முன்னிறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த சூழலில் நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கே. சிங் அமர்வு முன்பு வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருந்தகங்களில் மட்டுமே மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க நிர்பந்தம் செய்வது வருத்தம் அளிக்கிறது. எனினும் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. இது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் ஆகும். தனியார் மருத்துவமனைகள், தனியார் மருந்தகங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மாநில அரசுகள் புதிய விதிகளை வரையறுத்து முறையாக அமல்படுத்த வேண்டும்.
ஏழை நோயாளிகளுக்கு குறைவான விலையில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதை மாநில அரசுகளே உறுதி செய்ய வேண்டும்.
பல்வேறு மாநில அரசுகள் குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதை வரவேற்கிறோம். வழக்கு இத்துடன் முடித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT