Last Updated : 04 Mar, 2025 09:27 PM

 

Published : 04 Mar 2025 09:27 PM
Last Updated : 04 Mar 2025 09:27 PM

தேசிய ஜவுளித் தொழில் வளர்ச்சியில் தமிழகம் 2-ம் இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்

கோவை: தேசிய ஜவுளித் தொழில் வளர்ச்சியில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது என, ஜவுளித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்கள் உற்பத்தி குறித்து தொழில்முனைவோருக்கான ஐந்து நாட்கள் பயிற்சி முகாம், கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிட்ரா) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜவுளித் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, “ஜவுளித்துறை வளர்ச்சியை பொறுத்தவரை அரசும், தொழில்முனைவோரும் இணைந்து முன்னெடுக்கும்போது வெற்றியாக மாறும். அதற்கான வழிகாட்டுதல்கள் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தொழில்துறையில் சிறந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. அவிநாசி சாலை மேம்பாலம் ரூ.600 கோடியில் நீட்டிக்கப்படுகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ஏழு மாடி கொண்ட நூலகம் கட்டப்படுகிறது. செம்மொழிப் பூங்கா பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதுபோன்று கோவையின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து முதல்வர் மேற்கொண்டு வருகிறார். கோவை தொழில்துறையினர் கோரிக்கைகள் குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டு வருகிறது” என்றார்.

தமிழக ஜவுளித்துறை அமைச்சர் காந்தி பேசும்போது, “கோவை தொழில்துறையினரின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். தமிழ்நாட்டில் வேளாண் விளையபொருட்கள் பட்டியலில் தவறுதலாக பருத்தி சேர்க்கப்பட்டு, 1 சதவீத செஸ் வரி விதிக்கப்பட்டு வந்தது.

ஜவுளித் தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று, ‘செஸ்’ வரியை நீக்கி முதல்வர் உத்தரவிட்டார். கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய அரசு ‘மினி டெக்ஸ்டைல் பார்க்’ அமைக்க, ரூ. 2.5 கோடி மானியம் அறிவித்தது. சாலை அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளுக்கு மட்டுமே செலவிட முடியும் என விதிமுறை இருந்தது. கோரிக்கைகளை ஏற்று அந்த விதிமுறையை நீக்கி நாங்கள் அரசாணை பிறப்பித்தோம். தமிழக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஜவுளித்துறை வளர்ச்சியில் நாட்டில் இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது” என்று பேசினார்.

‘சிட்ரா’ நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜ்குமார், ‘சைமா’ தலைவர் சுந்தரராமன், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல். ‘சிட்ரா’ இயக்குநர் பிரகாஷ் வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

‘10 நாட்களுக்குள் புதிய ஜவுளிக் கொள்கை’: செய்தியாளர்களிடம் அமைச்சர் காந்தி கூறும்போது, “தமிழக ஜவுளித்துறை வளர்ச்சியில் முதல்வர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். பழைய நூற்பாலைகளில் அதிநவீன இயந்திரங்கள் நிறுவ மானிய தொகை அதிகரித்து வழங்கப்படுகிறது. தமிழக அரசின் நடவடிக்கை தொழில்முனைவோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. புதிய ஜவுளிக்கொள்கை 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்” என்றார்.

‘மின் வாரியத்துக்கு ரூ.52 ஆயிரம் கோடி மானியம்’: அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போது, “கருமத்தம்பட்டியில் விசைத்தறி கூடங்கள் மூடப்படுவதாக கூறுபவர்கள் தமிழக அரசு வழங்கிய சலுகைகளுக்காக அந்த பகுதியில் உள்ள விசைத்தறியாளர்கள் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தியதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

மின் கட்டணம் தொடர்பாக ஜவுளித் தொழில் துறையினர் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதியில் ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவத்தோம். அது நிறைவேற்றப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.52 ஆயிரம் கோடி மின்வாரியத்திற்கு மானியமாக முதல்வர் வழங்கியுள்ளார். இல்லையெனில் மின்வாரியம் மூடப்பட்டிருக்கும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x