Published : 04 Mar 2025 12:56 AM
Last Updated : 04 Mar 2025 12:56 AM
பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பின் விதிமுறைகளை மீறியது மற்றும் பெரிய அளவில் நிதி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ஊடக நிருபர் சபன் ஸ்ரீவத்ஸவா தொடர்ந்த வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.இ. பங்கர் அமர்வு முன்பு கடந்த சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்கட்ட ஆதாரங்கள் இருப்பதாக கூறி செபி முன்னாள் தலைவர் மாதவி புரி புச் மற்றும் 5 அதிகாரிகளுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்த ஊழல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் 30 நாட்களுக்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மாதவி, பிஎஸ்இ நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இது அவசர வழக்காக நீதிபதி எஸ்.ஜி. டிகே தலைமையிலான ஒரு நபர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தன்னிச்சையானது மட்டுமின்றி சட்டவிரோதமானது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி எஸ்.ஜி.டிகே கூறுகையில் , “ இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) அன்று முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதுவரை, ஊழல் தடுப்பு பிரிவு, சிறப்பு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையையும் எடுக்க கூடாது" என்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT