Published : 03 Mar 2025 03:17 PM
Last Updated : 03 Mar 2025 03:17 PM
மும்பை: பங்குச் சந்தை மோசடி தொடர்பான எஃப்ஐஆர் உத்தரவை எதிர்த்து செபியின் முன்னாள் தலைவர் மாதவி புரி புச், பிஎஸ்இ நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி உள்ளிட்ட 6 பேர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பங்குச் சந்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சசிகாந்த் ஏக்நாத்ராவ் பங்கர், தவறு நடந்திருப்பது முதல்கட்ட ஆதாரங்களில் தெளிவாக தெரிகிறது. எனவே, மாதவி புரி புச், 5 அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு அமைப்பு (ஏசிபி) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இந்த விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். 30 நாட்களுக்குள் ஏசிபி தனது நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக இருந்த மாதவி புரி புச், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி, அதன் முன்னாள் தலைவரும் பொது நல இயக்குநருமான பிரமோத் அகர்வால், செபியின் தற்போதைய மூன்று முழுநேர இயக்குநர்களான அஸ்வானி பாட்டியா, அனந்த் நாராயண் ஜி, கமலேஷ் சந்திர வர்ஷ்னி ஆகியோர் இந்த உத்தரவுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.ஜி. திகே தலைமையிலான ஒற்றை நீதிபதி அமர்வு முன் அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மாதவி புரி புச், அஸ்வனி பாட்டியா, அனந்த் நாராயண் ஜி, கமலேஷ் சந்திர வர்ஷ்னி ஆகியோர் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், சுந்தரராமன் ராமமூர்த்தி மற்றும் பிரமோத் அகர்வால் ஆகியோருக்காக மூத்த வழக்கறிஞர் அமித் தேசாயும் ஆஜராகி வாதாடினர்.
இதையடுத்து, ,வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு (ஏசிபி) உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT