Published : 01 Mar 2025 04:57 PM
Last Updated : 01 Mar 2025 04:57 PM
மும்பை: செபி மீதான நம்பிக்கையை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம் என்று அதன் தலைவராக பொறுப்பேற்ற துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மூலதன சந்தைகளை மேற்பார்வையிடுவதற்கான மத்திய அமைப்பான செபி-யின் தலைவராக துஹின் காந்தா பாண்டே இன்று (மார்ச் 1) பொறுப்பேற்றார். முன்னதாக, மும்பையில் உள்ள செபி தலைமையகத்துக்கு வந்த அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. செபி நிர்வாகிகளின் வரவேற்புடன் துஹின் காந்தா பாண்டே அதன் தலைவராக பொறுப்பேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துஹின் காந்தா பாண்டே, செபியின் நான்கு நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார். “நாங்கள் நம்பிக்கைக்காக வேலை செய்கிறோம், வெளிப்படைத் தன்மைக்காக வேலை செய்கிறோம், குழுப் பணிக்காக வேலை செய்கிறோம், தொழில்நுட்பத்துக்காக வேலை செய்கிறோம். உலகின் சிறந்த சந்தை நிறுவனங்களில் ஒன்றை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம். செபி மிகவும் வலுவான சந்தை நிறுவனம். இது பல ஆண்டுகளாக தொடர்ந்து மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அது தொடரும்.
நாங்கள் (செபி) இந்திய மக்களின் நம்பிக்கையைக் காக்கிறோம். இந்திய நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைக் காக்கிறோம். அரசாங்கத்தின் நம்பிக்கையையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும், தொழில்துறையினரின் நம்பிக்கையையும் காக்கிறோம். நம்பிக்கை மிகவும் முக்கியமானது. நாங்கள் அனைவரும் முன்னோக்கிச் செல்வோம்” என்று தெரிவித்தார்.
1987-ம் ஆண்டு ஒடிசா பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான பாண்டே, நிதி மற்றும் வருவாய் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவரை செபி-யின் புதிய தலைவராக அரசாங்கம் வெள்ளிக்கிழமை நியமித்தது. அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை, எது முன்னதாக வருகிறதோ அதுவரை அவர் இப்பதவியில் இருப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளநிலை பட்டம் பெற்ற பாண்டே, பிரிட்டனின் பிர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய நிதித் துறை செயலாளராக அவர் பதவியேற்றார். மத்திய பட்ஜெட்டை தயார் செய்ததில் அவர் முக்கிய பங்கு வகித்தார். கடந்த ஜனவரி 9-ம் தேதி வருவாய் துறையின் செயலாளராகவும் அவர் பொறுப்பேற்றார். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு டாடா குழுமத்துக்கு விற்பனை செய்ததில் துஹின் காந்தா பாண்டே முக்கிய பங்காற்றினார்.
செபி தலைவராக, சந்தை விதிமுறைகளை வலுப்படுத்துதல், முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் மூலதனச் சந்தைகளில் சீர்திருத்தங்களை மேற்பார்வையிடுவதில் பாண்டே முக்கிய பங்கு வகிப்பார். நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கையில் அவரது விரிவான அனுபவம் செபி-யின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செபியின் தலைவராக இருந்த மாதபி பூரி புச்சின் பதவிக்காலம் பிப்.28, 2025 அன்று முடிவடைந்ததை அடுத்து, அதன் புதிய தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT