Published : 01 Mar 2025 03:56 AM
Last Updated : 01 Mar 2025 03:56 AM
புதுடெல்லி: வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாற சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி தேவை என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2000 ஆண்டு முதல் இன்று வரை இந்தியப் பொருளாதாரம் 4 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. தனிபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட 3 மடங்காகியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 2000-ம் ஆண்டில் 1.3% ஆக இருந்தது. இது 2023-ல் இரு மடங்காக, அதாவது 3.4% ஆக அதிகரித்துள்ளது. உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியால் கடும் வறுமை மிகவும் குறைந்துள்ளது. சேவை வழங்கல் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த சாதனைகளின் அடிப்படையில், 2047-ம் ஆண்டுக்குள் அதிக வருமானம் கொண்ட நாடாக மாற வேண்டும் என்ற லட்சிய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
வரும் 2047-ம் ஆண்டுக்குள் உயர் வருவாய் கொண்ட நாடாக இந்தியா மாற சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி தேவை. இந்த இலக்கை அடைய நிதித் துறையிலும் நிலம் மற்றும் தொழிலாளர் சந்தையிலும் சீர்திருத்தங்கள் தேவைப்படும்.
2000 ஆண்டு முதல் 2024 வரை இந்தியா சராசரியாக 6.3 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இது எதிர்கால இலக்குகளுக்கு அடித்தளம் அமைத்துள்ளது. என்றாலும் 2047-ம் ஆண்டுக்குள் அதிக வருமானம் கொண்ட நாடு என்ற இலக்கை அடைவது வழக்கமான வணிக சூழ்நிலையில் சாத்தியமில்லை.
இந்தியாவின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் தற்போதைய நிலையை விட கிட்டத்தட்ட 8 மடங்கு அதிகரிக்க வேண்டும். வளர்ச்சி மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டும். மேலும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அதிக வளர்ச்சி நீடிக்க வேண்டும்.
இந்த இலக்கை அடைய இந்தியா தற்போதைய முயற்சிகளை தொடர்வது மட்டுமின்றி சீர்திருத்தங்களை விரிவுபடுத்தவும் தீவிரப்படுத்தவும் வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக வங்கியின் இந்தியாவுக்கான இயக்குநர் அகஸ்டி டானோ கோமே கூறுகையில், “சிலி, தென் கொரியா, போலந்து போன்ற நடுத்தர வருவாய் நாடுகள், உயர் வருவாய் நாடுகளாக மாறியுள்ளன. உலகப் பொருளாதாரத்தில் தங்கள் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவதன் மூலம் உயர் வருமான நாடுகளாக எவ்வாறு வெற்றிகரமாக மாறின என்பதை இந்த நாடுகள் காட்டுகின்றன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT