Published : 28 Feb 2025 07:36 PM
Last Updated : 28 Feb 2025 07:36 PM
மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசின் புதிய வரிவிதிப்பு அச்சுறுத்தல் சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் எதிரொலியாக, மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1,400+ புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஒருநாள் வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.7.16 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக நேரத்தின் இறுதியில், சென்செக்ஸ் 1,414.33 புள்ளிகள் (1.90 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 73,198.10 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி தொடர்ந்து 420.35 புள்ளிகள் (1.86 சதவீதம்) சரிவடைந்து 22,124.70 ஆக இருந்தது. கடந்த 2024, செப்.27-ம் தேதி சென்செக்ஸ் அதன் அதிகபட்ச உச்சமான 85,978.25 எட்டிய பின்பு, அதிலிருந்து கிட்டத்தட்ட 12,780.15 புள்ளிகள் (14.86 சதவீதம்) வீழ்ச்சியடைந்துள்ளது. அதேநாளில் நிஃப்டியும் அதன் உச்சமான 26,277.35 புள்ளிகளில் இருந்து 4,152.65 புள்ளிகள் (15.80 சதவீதம்) வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை வெளிநாட்டு நிறுவனங்கள் குறைத்து வருவது, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு அச்சுறுத்தல்களால் அமெரிக்க பொருளாதாரம் குறித்து முதலீட்டாளர்களிடம் ஏற்பட்ட பதற்றமே இந்த சரிவுக்கு வழிவகுத்துள்ளது என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, மெக்சிகோ மற்றும் கனடா பொருள்களுக்கு 25 சதவீதமும், சீன பொருள்களுக்கு 10 சதவீதமும் கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்ற ட்ரம்பின் நடவடிக்கை, மார்ச் 4-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்ற புதிய அறிவிப்பே, உலகளாவிய சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக இந்தியச் சந்தைகள் இந்தச் சரிவினைச் சந்தித்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தைப் பொறுத்தவரையில், டெக் மகேந்திரா 6 சதவீதமும், இண்டஸ்இண்ட் வங்கி 5 சதவீதமும் சரிவைச் சந்தித்திருந்தன. அதேபோல், மகேந்திரா அண்ட் மகேந்திரா, பாரதி ஏர்டெல், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், டைட்டன், டாடா கன்சல்டன்சி சர்வீஸ், நெஸ்ட்லே மற்றும் மாருதி சுசுகி போன்ற பெரிய நிறுவனங்களும் வீழ்ச்சி கண்டிருந்தன. ஹெச்டிஎஃப்சி வங்கி மட்டுமே உயர்வடைந்திருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருள்களுக்கும் அதிக வரிகள் விதிக்கப்படும் சாத்தியக் கூறுகள் உள்ளன என்று கூறப்படுவதால், இந்தப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. சந்தைகளின் இந்த நிச்சயமற்ற நிலையை முதலீட்டாளர்கள் கடந்து செல்லும் நிலையில், அனைவரது பார்வையும், மூன்றாவது காலாண்டின் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகள் மீது கவனம் கொண்டுள்ளது. பொருளாதார் மீட்சியை அது முன்னறிவிக்கும் என்ற நிலையில், அது சந்தைகளில் போக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT