Published : 28 Feb 2025 05:09 PM
Last Updated : 28 Feb 2025 05:09 PM
சேலம்: சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சேலம் மாவட்டத்தில் உள்ள தங்க நகை கைவினைஞர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டு தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பங்குச் சந்தையில் முதலீடு செய்து வரும் பெரும் தொழில் அதிபர்கள், சமீபகாலமாக தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தங்க நகை தொழில் செய்து வரும் கைவினைஞர்கள், தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவாய் இழப்பு ஏற்பட்டு வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் சேலம் மாநகர தலைவர் மணிகண்டன் கூறியது: சேலம் மாவட்டத்தில் இரண்டாவது அக்ரஹாரம், செவ்வாய்ப்பேட்டை, குகை உள்பட பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்க நகை செய்யும் தொழிலி்ல் ஈடுபட்டுள்ளனர். பரம்பரையாக தங்க நகை தொழிலில் ஈடுபட்டு வரும் கைவினைஞர்களுக்கு இத்தொழிலை தவிர மாற்றுத் தொழில் தெரியாது. இதனால், தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டே,
தங்க நகை ஆபரணங்கள் செய்யும் தொழில் வாய்ப்பை பெற்று வருகிறோம். கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58,700 என விற்கப்பட்டது. தற்போது ஒரு பவுன் ரூ.64,400-க்கு விற்பனையாகிறது. இதுவரை தங்கம் பவுனுக்கு ரூ.6 ஆயிரம் வரை விலை அதிகரித்துள்ளது.
இதனால், தங்க நகை செய்யும் தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள், தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை ஏற்றத்தால் தங்க நகை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் 70 சதவீதம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
திருமண விசேஷம், வீட்டு விசேஷ நிகழ்ச்சி என அத்தியாவசிய நகை தேவை உள்ளவர்கள் மட்டுமே தாலி, செயின் உள்ளிட்ட நகை செய்திட தொழில் வாய்ப்பு வழங்கி வருகின்றனர். இதனால், தொழில் முடங்கி, பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறோம்.
மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு விஸ்வகர்ம யோஜனா திட்டம் மூலம் நகை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரூ.3 லட்சம் தொழில் கடனுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. பிற மாநிலங்களில் இத்திட்டம் செயல்படும் நிலையில், தமிழகத்தில் திமுக அரசு மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தவில்லை.
இதற்கு மாற்றாக கலைஞர் கைவினைஞர்கள் கடனுதவி திட்டம் என 14 தொழில்களுக்கு கடனுதவி வழங்குகிறது. இதில் தங்க நகை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தால், இயந்திரம் வாங்க மட்டுமே கடனுதவி வழங்க முடியும் என வங்கிகள் கூறிவிட்டன.
தங்க நகை தொழிலில் கைவினைஞர்களான எங்களுக்கு இயந்திரம் வாங்கி தொழி்ல் செய்ய வேண்டுமெனில் ரூ.16 லட்சம் முதல் ரூ.25 லட்சம் அளவிலான இயந்திரங்களை வாங்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு இத்தொழிலில் முதலீடுசெய்திட முடியாது. எனவே, தொழில் கடனாக தங்க நகை ஆசாரிகளுக்கு இயந்திரம் வாங்க அல்லது தொழில் கடனாக ரூ.3 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தங்க நகை கைவினைஞர் மோகன் கூறியது: சேலம் மாவட்டத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் தங்க நகை தொழிலை நம்பியுள்ளன. இத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வழக்கமாக வரும் ஆர்டர்கள் குறைந்து, தங்க நகை தொழில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. தங்க நகை விலை சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்படுவதால், உலகளாவிய பொருளாதார அடிப்படையில் எளிய தங்க நகை கைவினைஞர்கள் தொழில் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது பெருமளவு தங்க நகை செய்திட வேலை வாய்ப்பு இல்லாததால், தங்க நகை தொழிலாளர்கள் தொழில் தடுமாற்றத்தால், வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். எனவே, தொழில் சார்ந்த கடனுதவியை அரசு வழங்க முன்வந்தால், நகை தொழிலாளர்கள் தொழிலை அபிவிருத்தி செய்திடவும், தொழில் பாதிப்பை சமாளிக்கவும் வழி ஏற்படும். எனவே, தங்க நகை கைவினைஞர்கள் தொழிலை ஊக்கப்படுத்த அரசு கடனுதவிகளை வழங்க முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT