Published : 28 Feb 2025 04:23 PM
Last Updated : 28 Feb 2025 04:23 PM

தமிழகத்தில் தினசரி பால் கொள்முதலை உயர்த்த அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: தினசரி பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அனைத்து மாவட்ட பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இன்று 27.02.2025 சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் உள்ள பொது மேலாளர்கள் மற்றும் இணையத்தில் உள்ள அனைத்து துறைத் தலைவர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர், அனைவரையும் வரவேற்று ஆய்வுக்கூட்டத்தில் ஆய்வு பொருளை எடுத்துரைத்து பால்வளத்துறை அமைச்சரை ஆய்வு செய்திட கேட்டுக்கொண்டார்.

அரசு செயலாளர், கோடைகாலத்தில் ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்களான தயிர், மோர், லஸ்ஸி மற்றும் ஐஸ்கீரிம் விற்பனையை அதிகரிக்கவும் பொதுமக்களுக்கு எளிதாக கிடைத்திட வழிவகை செய்யவும், பால் கொள்முதலை அதிகரிக்கவும் கூறினார். பால்வளத் துறை அமைச்சர், ''தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஆவின் நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது'' என்று தெரிவித்தார். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வாரியாக பொது மேலாளர்களிடம் ஒன்றியங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

துணை பதிவாளர் (பால்வளம்) மற்றும் ஆவின் பொது மேலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து பால் கொள்முதலை அதிகரிக்கவும், ஒன்றியங்களில் தற்போதுள்ள தினசரி பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையினை ரூ.1.50 கோடியாக உயர்த்தவும் அறிவுறுத்தினார். மேலும் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி ஆகிய பால் உபபொருட்களின் விற்பனையை உயர்த்தவும், நெய் விற்பனையை அதிகரிக்கவும் ஒன்றியங்கள் இலாபத்தில் செயல்படவும் பொது மேலாளர்கள் அர்பணிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

அனைத்து ஒன்றியங்கள் மற்றும் தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் பரிசோதனைக் கருவிகள் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், மாவட்ட ஒன்றியம் / பால் குளிரூட்டும் நிலையங்களிலிருந்து மொத்த பால் குளிர்விப்பு மையங்கள் (BMC)மற்றும் தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பாலின் அளவு மற்றும் தரம் குறித்த உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்கவும், சங்க உறுப்பினர்களுக்கு 10 நாட்களுக்குள் பால் பணம் பட்டுவாடா நிலுவையின்றி செலுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.3/- ஊக்கத் தொகையினை பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கருணை அடிப்படையிலான பணிநியமனம் வழங்குவது: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் - ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்தில் காலமான பணியாளர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வழங்கப்படும் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணையானது 4 நபர்களுக்கு (3 ஆண்கள் மற்றும் 1 பெண்) பால்வளத்துறை அமைச்சர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசுச் செயலாளர், ந.சுப்பையன், , பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, இணை நிருவாக இயக்குநர் க.பொற்கொடி, காவல்துறை இயக்குநர் மற்றும் முதன்மை விழிப்புக்குழு அதிகாரி ராஜீவ் குமார், பொது மேலாளர் (நிருவாகம்), மற்றும் இணையத்தில் உள்ள அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x