Published : 27 Feb 2025 10:13 PM
Last Updated : 27 Feb 2025 10:13 PM
கோவை: ‘ஸ்டார்’ முத்திரையிட்ட பம்ப்செட் விற்பனை 2026-ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், வட மாநிலங்களில் ஐஎஸ்ஓ, ஸ்டார் முத்திரைகளை போலியாக பயன்படுத்தி வரும் தொழில் நிறுவனங்களால் கோவை பம்ப்செட் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா), ‘கோயிண்டியா’, ‘சிட்டார்க்’ ஆகிய தொழில் அமைப்புகள் சார்பில் பம்ப் உற்பத்தியாளர்கள் சந்திப்பு கூட்டம், கோவை ஆவாரம்பாளையம் சாலையில் அமைந்துள்ள ‘கோயிண்டியா’ வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடந்தது.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மிதுன் ராம்தாஸ், இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (இப்மா) தலைவர் கார்த்திக் ஆகியோர் பேசியதாவது: ஆற்றல் சேமிப்பு திறன் கொண்ட பம்ப்செட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஸ்டார் முத்திரை பெற்ற பம்ப்செட் விற்பனை 2026 ஜனவரி 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பம்ப்செட் தேவையில் 50 சதவீதம் கோவை மாவட்ட தொழில் நிறுவனங்கள் பங்களித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொழில் அமைப்புகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. செயல்படுத்தும் முறையில்தான் தொழில்முனைவோருக்கு சிரமம் இருக்கும். தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து தொழில்துறையினருக்கு உதவும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சீமா முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார் பேசும்போது, “கடந்த 2009-ம் ஆண்டு ஸ்டார் முத்திரை கட்டாயமாக்குவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டிவி, ஃபிரிட்ஜ் போன்ற மற்ற எலெக்ட்ரானிக் பொருட்களுடன் பம்ப்செட்டை ஒப்பிடக் கூடாது. சாலையின் தரம், போக்குவரத்து நெரிசல், குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே ஒரு மோட்டார் வாகனம் சிறப்பாக செயல்படும். ஆனால் பம்ப்செட்டை பொருத்தவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் மின் விநியோகத்தில் வேறுபாடு காணப்படும்.
குறிப்பாக ஜார்க்கண்ட், பிஹார் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் விநியோகிக்கப்படும் மின்சாரத்தில் ஸ்டார் முத்திரை பெற்ற பம்ப்செட் பயன்படுத்தினால் வேலை செய்யாது. இருப்பினும் வடமாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பம்ப்செட் பொருட்களுக்கு ஐஎஸ்ஐ கூட கிடைக்காத நிலையில் பல நிறுவனங்கள் போலியாக ‘ஐஎஸ்ஐ’, ‘5 ஸ்டார்’ போன்ற தர முத்திரிகைகளை சட்ட விரோதமாக பயன்படுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பம்ப்செட் அனைத்தும் முறைப்படி தர முத்திரை பெற்று விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, ஸ்டார் முத்திரை பம்ப்செட் பொருட்களுக்கு கட்டாயம் என்ற திட்டம் அமல்படுத்தும்போது மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை கவனமாக கண்காணிக்க தமிழக தொழில் அமைப்புகள் வலியுறுத்த வேண்டும். குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு சவாலாக தான் இருக்கும். இருப்பினும் தொழில்முனைவோர் அதற்கேற்ப தங்களை தயார் செய்து கொள்ள வேண்டியது அவசியம்” என்றார்.
‘கோயிண்டியா’ தலைவர் விக்னேஷ், ‘சிட்டார்க்’ பம்ப்செட் தர பரிசோதனை நிலையத்தின் தலைவர் மோகன் செந்தில்குமார், தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கல்யாண்சுந்தரம், கம்ப்ரசர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கிருத்திகா உள்ளிட்ட பம்ப்செட் உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT