Published : 27 Feb 2025 07:02 AM
Last Updated : 27 Feb 2025 07:02 AM
புதுடெல்லி: நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் உட்பட அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், புதிதாக பொதுவான ஓய்வூதிய திட்டத்தை (யுனிவர்சல் பென்சன் ஸ்கீம்) கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் தற்போது அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன. அதேபோல் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடல் பென்ஷன் யோஜ்னா திட்டம் அமலில் உள்ளது. இதில் சேர்ந்து பணத்தை முதலீடு செய்து 60 வயதை பூர்த்தி செய்பவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 முதல் 1,500 வரை பென்ஷன் வழங்கப்படுகிறது. மேலும், நடைபாதை வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், வேலையாட்கள் போன்றவர்கள் பயன்பெற பிரதான் மந்திரி யோகி மந்தன் யோஜ்னா (பிஎம்-எஸ்ஒய்எம்) ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது.
விவசாயிகளுக்கென பிரதான் மந்திரி கிஸான் மந்தன் யோஜ்னா என்ற ஓய்வூதிய திட்டம் உள்ளது. இதில் சேர்ந்து பணத்தை முதலீடு செய்து 60 வயதை பூர்த்தி செய்யும் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், புதிதாக பொதுவான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் மாத சம்பளம் பெறுவோர், சுயதொழில் செய்வோர் என அனைத்து மக்களுக்கும் பொருந்தும். இதற்காக ஏற்கெனவே இருக்கும் இபிஎப்ஓ போல் கட்டாயமாக இல்லாமல், இந்த திட்டத்தில் விருப்பப்பட்டவர்கள் சேரலாம். மேலும், இந்த திட்டத்தில் அரசு தரப்பில் இருந்து எந்த பங்களிப்பும் இருக்காது.
ஓய்வூதியம் மற்றும் சேமிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த புதிய திட்டத்தை வடிவமைக்க மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதற்கான திட்ட வரைவை பிஎப் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. பொதுவான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்போது, தற்போது நடைமுறையில் உள்ள சில திட்டங்களும் இதனுடன் ஒருங்கிணைப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT