Published : 23 Feb 2025 04:35 AM
Last Updated : 23 Feb 2025 04:35 AM
புதுடெல்லி: அந்நிய நேரடி முதலீட்டு மேலாண்மை சட்ட விதிகளை மீறியதாக பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை ரூ.3.44 கோடி அபராதம் விதித்துள்ளது.
குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை பிபிசி நிறுவனம் தயாரித்தது. இதற்கு மத்திய அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை இந்தியாவில் ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிபிசி இந்தியா நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.
அதன்பிறகு அந்நிய நேரடி முதலீட்டை பிபிசி இந்தியா நிறுவனம் 26 சதவீதமாக குறைக்கவில்லை என்றும், இது இந்திய சட்டத்தின் படி விதிமுறை மீறல் எனக் கூறி அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.
இந்த விதிமுறை மீறலுக்காக கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்த அபராதமாக பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு ரூ.3.44 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் 3 இயக்குநர்களுக்கும் தலா ரூ.1.14 கோடி அபராதத்தை அமலாக்கத்துறை விதித்துள்ளது.
இது குறித்து பிபிசி செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ அமலாக்கத்துறையிடம் இருந்து இது வரை , நாங்கள் எந்த உத்தரவும் பெறவில்லை. பிபிசி நிறுவனம் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும், விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறது. அமலாக்கத்துறையிடம் இருந்து உத்தரவு ஏதாவது வந்தால், அதற்கேற்ப நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT