Published : 21 Feb 2025 05:17 PM
Last Updated : 21 Feb 2025 05:17 PM
புதுடெல்லி: சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கழிவறையை பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கழிவறையை ஒருமுறை பயன்படுத்த 2 நிமிடம் மட்டுமே ஊழியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் போஷான் நகரில் ‘த்ரீ பிரதர்ஸ் மெஷின் மேனுஃபேக்சுரின் கம்பெனி’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கழிவறையை பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது, கடந்த பிப்ரவரி 11-ம் தேதி, ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், ஒழுக்கத்தை கடைபிடிக்கவும் இந்த புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விதியின்படி, அங்கு பணிபுரியும் ஊழியர்கள், காலை 8 மணிக்கு முன்பும், காலை 10.30 மணி முதல் 10.40 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் 3.40 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், கூடுதல் நேரம் வேலை செய்பவர்கள் இரவு 9 மணிக்குப் பிறகு கழிப்பறைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
மற்ற நேரங்களில் கழிப்பறை பயன்படுத்த வேண்டுமானால், 2 நிமிடம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருத்துவ பிரச்சினை உள்ளவர்கள் எச்.ஆர். அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்படுகிறது. அதோடு, அந்நிறுவனத்தில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தி ஊழியர்களைக் கண்காணிப்பதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர், நிறுவனத்தின் விதியை மீறுபவர்களுக்கு 100 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1,200) அபராதம் விதிப்பதாகவும் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த விதி பிப்ரவரி இறுதி வரை சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படுகிறது. மார்ச் 1-ஆம் தேதி முதல் அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடத்தில் செயல்திறன் முக்கியமானது என்றாலும், ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினைகளைக் கையாள்பவர்களுக்கு இது கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தவதாக அந்நிறுவன ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த புதிய விதிக்கு பல கண்டன குரல்களும் எழுந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT