Last Updated : 20 Feb, 2025 11:16 PM

 

Published : 20 Feb 2025 11:16 PM
Last Updated : 20 Feb 2025 11:16 PM

ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ‘ப்ரீலேன்சர்ஸ்’ பணி அதிகரிக்கும்: கோவையில் மனிதவள அதிகாரிகள் தகவல்

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு(சிஐஐ) கோவை சார்பில், மனிதவள மேம்பாட்டுத்துறை கருத்தரங்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடந்தது.‘நெக்ஸ் அப் பார்ட்னர்ஸ்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆனந்த் வெங்கட்ராமன் பேசினார். படம்: ஜெ.மனோகரன்

கோவை: சுயமாக செயல்படும் ‘பிரிலேன்சர்ஸ்’ பணி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் அதிகரிக்கும். என, ‘சிஐஐ’ கருத்தரங்கில் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) கோவை சார்பில் மனிதவள மேம்பாட்டுத்துறை கருத்தரங்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு, கோவை துணை தலைவர் ராஜேஷ் துரைசாமி பேசும் போது, “அடுத்த தலைமுறை தொழிலாளர்கள் சுறுசுறுப்பான சூழல் கொண்ட வேலைவாய்ப்பையே அதிகம் தேடுவார்கள். எனவே மனிதவள மேம்பாட்டுபிரிவு அலுவலர்கள் தலைமைத்துவத்தை வளர்க்கவும், திறமையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

‘நெட்கான்’ டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகாலிங்கம் ராமசாமி பேசும் போது, “இன்றைய சூழலில் நிறுவனங்கள் இயந்திரங்களில் செய்யும் முதலீடுக்கு இணையாக திறன் வளர்ப்பு செயல்களிலும் அக்கறை காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. சுயமாக செயல்படும் ‘ப்ரீலேன்சர்ஸ்’ பணிப் பிரிவு தகவல் தொழில்நுட்பம் மற்றும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் அதிகரிக்கும். செயற்றை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தாவிட்டால் தொழில் நிறுவனங்கள் போட்டியிடும் தன்மையை இழக்க நேரிடும்” என்றார்.

‘நெக்ஸ் அப் பார்ட்னர்ஸ்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆனந்த் வெங்கட்ராமன் பேசும் போது, “இளைஞர்கள் தங்கள் பணியின் நோக்கத்தை தெரிந்து கொள்ளாத வரை ஒரு பணியில் நிலையாக இருக்க மாட்டார்கள். கட்டுப்பாடு கொள்ளும் போது அவர்களின் பணித்திறன் அதிகரிக்கும். செயற்றை நுண்ணறிவு வரவேற்கத்தக்கது என்ற போதும், தரவுகளை எவ்வாறு நாம் பதிவு செய்கிறோம் என்பது மிக முக்கியம்.

தவறான தரவுகளை பதிவு செய்தால் முடிவுகள் மிகவும் அபத்தமாகவும், தவறாகவும் கிடைக்கும். யோகா உள்ளிட்ட மனநலம், உடல் நலம் சார்ந்த பயிற்சிகள் தேவை என்ற போதும், ஏற்கெனவே சோர்வடைந்த தொழிலாளர்களுக்கு அவை அதிக பயன் தராது” என்றார். மாலை வரை நடந்த நிகழ்வில் பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x