Last Updated : 19 Feb, 2025 04:08 PM

 

Published : 19 Feb 2025 04:08 PM
Last Updated : 19 Feb 2025 04:08 PM

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்க 3 நாட்கள் சிறப்பு மேளா!

சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக சிறப்பு மேளா வரும், 21, 28 மற்றும் மார்ச்,10-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே, இத்திட்டத்தின் கீழ், இதுவரை 10 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

அஞ்சல்துறை சார்பில் சுகன்யா சம்ரித்தி எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் நலனுக்காக, 2015-ம் ஆண்டு, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு வசதியாக, வரும், 21, 28 மற்றும் மார்ச், 10 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு மேளாக்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக, அஞ்சலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்படும். சென்னை நகர அஞ்சல் மண்டலத்தின் கீழ் சென்னை, அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஆகியவை அடங்கும்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இத்திட்டத்தில், 10 லட்சம் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.8,351 கோடி டெபாசிட் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் குறைந்தபட்சம், ரூ. 250 முதல் அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம். இந்த சேமிப்பு திட்டத்துக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 8.2 சதவீதம் வட்டி வழங்க்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட்கள் வருமான வரிச் சட்டத்தின் 80-சி பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேருபவர்கள், தங்களது உயர் கல்வி தேவைக்காக 18 வயது அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு 50 சதவீத தொகை எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து, 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சி அடையும். மேலும், 18 வயதை அடைந்த பிறகு திருமணத்துக்கு ஒரு மாதத்திற்கு முன் அல்லது மூன்று மாதங்கள் கழித்து கணக்கை மூடலாம். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x