Last Updated : 18 Feb, 2025 05:41 PM

2  

Published : 18 Feb 2025 05:41 PM
Last Updated : 18 Feb 2025 05:41 PM

வங்கிக் கிளைகளில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் தேவை - மத்திய அரசுக்கு வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: வங்கி ஊழியர்கள் மீது வாடிக்கையாளர்கள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவதால், அனைத்து வங்கிக் கிளைகளிலும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களை பணியமர்த்த வேண்டும் என வங்கி ஊழியர் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு மற்றும் வங்கி நிர்வாகங்களின் கொள்கைகள் காரணமாக, வங்கிகளில் புதிய ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. இதனால், வங்கிகளில் ஊழியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நாடு முழுவதும் வங்கிகளில் 2 லட்சம் ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

எனவே, வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப சேவை வழங்க முடிவதில்லை. இதனால், கோபம் அடையும் வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இத்தகைய தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில், பிஹார் மாநிலம், நவாடாவில் உள்ள யூனியன் வங்கி மேலாளர் அபய் குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

இன்றைக்கு பல வங்கிக் கிளைகளில் பாதுகாவலர்கள் இல்லை. வங்கி நிர்வாகங்கள் வங்கிகளில் உள்ள பணம் மற்றும் நகைகளை பாதுகாத்தால் போதுமானது என நினைக்கிறது. ஆனால், ஊழியர்களை பாதுகாக்க தவறுகிறது. இதனால், அவர்கள் வாடிக்கையாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இவ்விவகாரத்தில் ரிசர்வ் வங்கியும், மத்திய நிதித் துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. நாடு முழுவதும் வேலையில்லாதவர்கள் அதிகளவில் உள்ளனர். இந்நிலையில், வங்கிகளில் போதிய அளவு ஊழியர்களை நியமிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது.

இன்றைக்கு வங்கிகளில் சேரும் படித்த இளைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காகத்தான் சேர்கின்றனர். இத்தகைய தாக்குதல்களில் சிக்கி தங்களது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதற்காக அல்ல.எனவே, வங்கிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x