Published : 18 Feb 2025 05:20 PM
Last Updated : 18 Feb 2025 05:20 PM

தமிழக அரசு புதிதாக விதித்த செஸ் வரி வசூலில் ‘கறார்’ - விவசாயிகள் அதிர்ச்சி

கோவில்பட்டி: தமிழக அரசு புதிதாக விதித்துள்ள செஸ் வரியை, வேளாண்மை விற்பனை அதிகாரிகள் கறாராக வசூல் செய்து வருகின்றனர். இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1.70 லட்சம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. ஆண்டுதோறும் பெய்யும் வடகிழக்கு பருவமழையை நம்பி சிறுதானியங்கள், பயறு வகைகள், பணப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், மூலிகை வித்துக்கள் போன்ற பல்வேறு வகையான விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளை பொருட்களை இருப்பு வைத்து, சந்தையில் கூடுதல் லாபத்துக்கு விற்பனை செய்ய கிடங்கு வசதி உள்ளது. எனினும், போதிய பொருளாதாரம் வலுவாக இல்லாத விவசாயிகள், களத்து மேட்டிலேயே தானியங்களை விற்று விடுகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் சந்தையில் விற்கக் கூடிய சிறுதானிய விளை பொருட்களுக்கு, தமிழக அரசு 1 சதவீத சந்தைக் கட்டணம் விதித்துள்ளது. ஆனால், நிலங்களில் இருந்து வீடுகளுக்கோ அல்லது கிட்டங்கிகளில் இருப்பு வைக்கவோ விவசாயிகள் கொண்டு செல்லும் விளை பொருட்களையும் வழிமறித்து, வேளாண்மை விற்பனை அதிகாரிகள் கறாராக வரி வசூல் செய்து வருகின்றனர். இதனால், விவ சாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெயரளவிலேயே விற்பனை கூடங்கள்: இதுகுறித்து, கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: தமிழக அரசின் வேளாண் விற்பனைக் குழு மூலம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டாரத் திலும், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலகம் தொடங்கப்பட்டது. விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பாலமாக இவை விளங்கின.

கிடங்கு வசதி, தராசு வசதி, நியாயமான எடை, விளைபொருட்களை கூடுதல் லாபத்துக்கு விற்கவும், பணப் பரிமாற்றத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வந்தன. இதனால், விவசாயிகள் பலனடைந்தனர். இதெல்லாம், சுமார் 25 ஆண்டுகளுக்கு முந்தைய செயல்பாடாகும். தற்போது, முறையான வழிகாட்டுதலின்றி, விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் வேளாண்மை விற்பனை பிரிவு செயல்படவில்லை. பெயரளவிலேயே ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன.

புதூர் சேமிப்பு கிடங்கு தவிர்த்து, பல வட்டாரங்களில் போதிய அளவில் கிடங்குகள் இல்லை. இதனால், தாங்கள் விரும்பிய தனியார் கமிஷன் கடைகளிலும், வீடு தேடி வரும் வியாபாரிகளிடமும் தானியங்களை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இதில், அரசின் வேளாண்மை விற்பனை பிரிவுக்கு எவ்வித பங்களிப்பும் இல்லை. விவசாயிகளின் விளை பொருட்கள் விற்பனை தரவுகளை வியாபாரிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டு, விவசாயிகளுக்கு உதவி வருவதாக வேளாண்மை விற்பனை பிரிவு கூறுகிறது.

பல கோடி வசூலாகும்: இந்நிலையில், விவசாயிகள் சந்தையில் விற்கக் கூடிய சிறுதானிய விளை பொருட்களுக்கு, 1 சதவீத சந்தைக் கட்டணத்தை தமிழக அரசு விதித்துள்ளது. தற்போது அறுவடைக் காலம் என்பதால், களம் மற்றும் நிலங்களில் இருந்து விளைபொருட்களை மூட்டைகளாக கட்டி டிராக்டரில் வீடுகளுக்கோ, கிடங்குகளுக்கோ எடுத்துச் சென்றால், ரெய்டு வருவது போல் விற்பனை குழு அதிகாரிகள் வழிமறித்து, செஸ் வரி செலுத்தினால்தான் மகசூல் மூட்டைகளை கொண்டு செல்ல அனுமதிப்போம் என, மிரட்டும் தொணியில் விவசாயிகளிடம் வரி வசூல் நடத்துகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ரூ.100 கோடிக்கு மேல் விளைபொருட்கள் வர்த்தகம் நடைபெறுகிறது. செஸ் எனப்படும் சந்தைக் கட்டணம் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும். இந்த வருவாயில் இருந்து ஒவ்வொரு கிராமத்திலும் விளை பொருட்கள் சேமிப்பு கிடங்கு, உலர் களம் அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x