Published : 18 Feb 2025 05:24 PM
Last Updated : 18 Feb 2025 05:24 PM
மதுரை: கடந்த 3 ஆண்டுகளாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மதுரை மாட்டுத்தாவணி ‘டைடல் பார்க்’ திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். ரூ.314 கோடியில் அமையும் இந்த திட்டத்தால் 5,500 படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
தலைநகர் சென்னையைப் போல், மதுரையில் தவகல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘டைடல் பார்க்’ திட்டம் அமைக்கப்படும் என கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்து இருந்தார். அதன்பிறகு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்ததால் தென் மாவட்ட படித்த இளைஞர்கள், தவகல் தொழில்நுட்ப தொழில் முனைவோர்கள் ஏமாற்றம் அடைந்து இருந்தனர்.
இந்நிலையில், இன்று (பிப்.18) மதுரை மாட்டுத்தாவணியில் ‘டைடல் பார்க்’ திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டைடல் பூங்கா பணிகளையும், அதற்கான வரைப்படம், முன்தயாரிப்பு பணிகளையும் பார்வையிட்டார்.
இந்த டைடல் பூங்கா, 5.34 லட்சம் சதுர அடியில் தரைதளம் மற்றும் பன்னிரெண்டு தளங்களுடன் கட்டப்பட உள்ளது. 5,500 படித்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். படித்த இளைஞர்கள் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதால் மதுரையின் சமூக பொருளாதாரம் மேலும் மேம்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த திட்டத்தை தொடங்கிய 18 மாதங்களில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் சாலி தளபதி, மகேஷ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னையை போல் மதுரையிலும்... - ‘இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழத்தினை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கினை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழத்தின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக, மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை போல் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன’ என்று அரசு தரப்பு தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT