Published : 18 Feb 2025 04:33 PM
Last Updated : 18 Feb 2025 04:33 PM
கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நில ஆர்ஜித பணிகள் தாமதமின்றி நடைபெறும் வகையில், சரவணம்பட்டியில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
கோவையில் 34.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலை என 2 வழித்தடத்தில் 32 ரயில் நிலையங்களுடன் ரூ.10,740 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அவிநாசி வழித்தடத்தில் தற்போது கட்டப்பட்டுவரும் மேம்பாலத்தை ஒட்டியுள்ள பகுதியில் மேம்பாலத்திற்கான தூண்கள் அமைத்தும், சத்தி வழித்தடத்தில் சாலையின் நடுவே மேம்பால தூண்கள் அமைத்தும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தும்போது நில ஆர்ஜிதம், மழைநீர் வடிகால், மின் கேபிள் மாற்றியமைத்தல் பணிகளை செயல்படுத்துவதில் ஆண்டுக்கணக்கில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை காலதாமதமின்றி செயல்படுத்த மெட்ரோ ரயில் அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது. கோவையின் ஐ.டி. காரிடராக உள்ள சரவணம்பட்டி பகுதியில் துடியலூர் செல்லும் சாலை, விளாங்குறிச்சி செல்லும் சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் சரவணம்பட்டி-காளப்பட்டி பகுதியில் மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது. இதனிடையே, சத்தி சாலையின் நடுவே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரயில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
தற்போது, சரவணம்பட்டி பகுதியில் ஈரடுக்கு மேம்பாலம் கட்ட மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சரவணம்பட்டியில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு, மேல் அடுக்கில் மெட்ரோ ரயிலும், கீழ் அடுக்கில் வாகனங்களும் செல்லும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமே இப்பணிகளை மேற்கொள்ளும். இதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து மேம்பால பணிகள் தொடங்கும். ஈரடுக்கு மேம்பாலத்தில் தூண்கள் முழுவதும் அமைத்து விடுவோம். இதில், கீழ் அடுக்கு மேம்பால வழித்தட பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறை மேற்கொள்ளும். மேல் அடுக்கில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை, மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொள்ளும். இதற்கான நிதியை மாநில அரசு, மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வழங்கும், என்றனர்.
ஏற்கெனவே, அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் அடுத்து லீ மெரிடியன் ஹோட்டல் அருகில் இருந்து நீலாம்பூர் வரை வாகனங்களும், மெட்ரோ ரயிலும் செல்லும் வகையில் 3.5 கிமீ தூரத்துக்கு ஈரடுக்கு மேம்பாலம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT