Published : 18 Feb 2025 04:32 PM
Last Updated : 18 Feb 2025 04:32 PM
சென்னை: வணிகவரித்துறையில் நடப்பு 2024-25 நிதி ஆண்டில் ஜன.31ம் தேதி வரை ரூ. 1,13,235 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தலைமையில் இன்று (பிப்.18) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், வணிகவரித் துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் 31.01.2024 வரையிலான வருவாய் ரூ. 1,01,234 கோடி. நிகழும் 2024-2025 நிதி ஆண்டின் 31.01.2025 வரையில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 1,13,235 கோடி. கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் 31.01.2025 வரை கூடுதலாக ரூ.12,001 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் ஜிஎஸ்டி சட்டம் 2017 பிரிவு 73-ன் ழ் 2017-2018, 2018-2019 மற்றும் 2019-2020 ஆகிய நிதி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட வரிவிதிப்பாணைகளில் எழுப்பப்பட்ட கேட்புகளில் நிலுவையிலுள்ள வரித்தொகையை 31.03.2025 க்குள் செலுத்தும் பட்சத்தில் நிலுவையிலுள்ள வட்டி மற்றும் தண்டத்தொகை தள்ளுபடி செய்யப்படுவதற்கான திட்டம் ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுறுத்தலின் படி நடைமுறையில் உள்ளது.
எனவே மேற்கண்ட வருடங்களுக்கு வரி நிலுவை பாக்கி வைத்துள்ள சம்பந்தப்பட்ட வணிகர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி, வரியை செலுத்தி, ஜிஎஸ்டி சட்டம் 2017ன் பிரிவு 128A-ல் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வட்டி மற்றும் தண்டத்தொகை செலுத்துவதிலிருந்து தள்ளுபடி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் தங்களது கோட்ட இணை ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.
இந்த நிதி ஆண்டில் இதுவரை பெற்றுள்ள வரி வருவாய் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக செயல்பட்ட ஆணையர் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர், எஞ்சியுள்ள நாட்களில் ஆக்கபூர்வமாக செயல்பட்டு அரசு நிர்ணயித்துள்ள வருவாய் இலக்கினை அடைவதற்கு அனைத்து இணை ஆணையர்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதேபோல் வணிகவரி அலுவலகங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT