Published : 18 Feb 2025 06:54 AM
Last Updated : 18 Feb 2025 06:54 AM
புதுடெல்லி: எம்எஸ்எம்இ கடன் உத்தரவாத திட்டத்தை நேற்று அறிமுகம் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூலதன செலவுக்கான இலக்கு 10.2% அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (எம்எஸ்எம்இ) பரஸ்பர கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார். அப்போது இந்த திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு அனுமதி கடிதங்களை அவர் வழங்கினார். இதன்படி, எம்எஸ்எம்இ நிறுவனங்கள், இயந்திரங்கள் வாங்க ஈட்டுப் பிணையம் அல்லது மூன்றாம் நபர் உத்தரவாதம் இல்லாமல் ரூ.100 கோடி வரை கடன் பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் தொழில் துறையினருடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் கடன் இடைவெளியை குறைக்க மத்திய அரசு முன்னுரிமை வழங்கும். அதேநேரம் இதனால் அரசின் எந்த ஒரு திட்டமும் பாதிக்கப்படாது. இதுவரை முலதன செலவில் கவனம் செலுத்திய அரசு வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நுகர்வை அதிகரிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனசிலர் கூறுவது தவறு. வரும் நிதியாண்டில் நுகர்வை அதிகரிக்க வேண்டும் என்பது அரசின் குறிக்கோளாக உள்ளது. இதற்காக வருமான வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முலதன செலவு குறைந்துவிடும் என கருதக்கூடாது. வரும் ஆண்டில் மூலதன செலவுக்கான இலக்கு முந்தைய ஆண்டைவிட 10.2% அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தக சூழலை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வர்த்தகம் செய்வதை எளிமையாக்குவதற்கான இணக்கம் தொடர்பான விதிமுறைகளை எளிதாக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அம்சமும் குறித்த காலத்தில் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது.
புதிய வருமான வரி மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் பற்றி நாடாளுமன்ற தேர்வுக் குழு ஆராயும். இந்த மசோதாவை உருவாக்குவது தொடர்பாக 60 ஆயிரம் பேர் இணையவழியில் கருத்து தெரிவித்திருந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) இந்திய சந்தையில் பங்குகளை அதிக அளவில் விற்றுவருவது பற்றிய கேள்விக்கு, “முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை தரும் சந்தையாக இந்தியா விளங்குகிறது. அவர்கள் இப்போது பங்குகளை விற்று லாபத்தை எடுத்துச் செல்கிறார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT