Published : 18 Feb 2025 12:56 AM
Last Updated : 18 Feb 2025 12:56 AM
அமெரிக்காவின் சமவிகித வரி விதிப்பு நடவடிக்கையால் இந்தியாவின் ஏற்றுமதிக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிக்கு நிகராக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் சமவிகித வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், இது தொடர்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஒரு அறிக்கையை வெளியிடுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 15 முதல் 20 சதவீதம் வரை வரி விதிக்க வாய்ப்பு உள்ளதாக மதிப்பிட்டுள்ளோம். இதனால், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 3 முதல் 3.5% அளவுக்கு மட்டுமே குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், ஏற்றுமதியை விரிவாக்குவது, மதிப்பு கூட்டு சேவையை அதிகரிப்பது மற்றும் புதிய வர்த்தக வழிகளை கண்டறிவது ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவால் ஏற்படும் பாதிப்பை சரிக்கட்ட முடியும் என இத்துறை சார்ந்தவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 17.7 சதவீதமாக இருந்தது. அதேநேரம், ஏற்றுமதியில் ஒரு குறிப்பிட்ட நாட்டின் சந்தையை மட்டும் நம்பியிருக்க வேண்டிய நிலையைக் குறைக்க இந்தியா வியூகம் வகுத்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமெரிக்கா இறக்குமதி செய்யும் இந்திய பொருட்களுக்கான வரி 2018-ல் 2.72% ஆக இருந்தது. இது 2021-ல் 3.91 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கான வரி 2018-ல் 11.59% ஆக இருந்தது. இது 2022-ல் 15.3% ஆக அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT