Last Updated : 12 Feb, 2025 06:09 PM

1  

Published : 12 Feb 2025 06:09 PM
Last Updated : 12 Feb 2025 06:09 PM

புதுச்சேரியில் 4 பொதுத்துறை நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் ரூ.388 கோடி இழப்பு: தணிக்கைக் குழு அறிக்கை

புதுச்சேரி: பாசிக், பாப்ஸ்கோ, பிஆர்டிசி, பிடிடிசி ஆகிய நான்கு பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த 2017 முதல் 2022 வரை ஐந்து ஆண்டுகளில் ரூ.388.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதி நிலை தணிக்கை அறிக்கைகள் தனித்தனியாக இன்று நான்கு சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழகம், புதுச்சேரி முதன்மை கணக்காய்வு தலைவர் திருப்பதி வெங்கடசாமி தலைமைச் செயலகத்தில் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது: ''பாசிக் நிறுவனம் நுண்ணுயிர் உரம், பூச்சிக்கொல்லி, குப்பை உர விஷயங்களை முழுமையாக செயல்படுத்தாத காரணத்தால் ரூ.2.14 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த 2017 முதல் 2022 வரை பாசிக் நிறுவனம் அரசு துறைகளுக்கு காய்கறிகளை மொத்த விலைக்கு தொடர்ந்து விநியோகிக்கவில்லை. இதனால் ரூ.9.1 கோடி இழப்பு ஏற்பட்டது. வேளாண் விற்பனைக் கூடங்களை மூடுவதில் ஏற்பட்ட காலதாமத்தால் பாசிக் நிறுவனத்துக்கு ரூ. 22.89 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பாசிக் நிறுவனம் 11 ஐஎம்எப்எல் உரிமங்களை புதுப்பிக்காமல் செயலற்ற நிலையில் வைத்திருந்தன. 2020-21ல் 21 உரிமங்களை புதுப்பிக்கவில்லை. மேலும் பாப்ஸ்கோ நிறுவனம் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்ததன் மூலம் ரூ. 8 கோடி வருவாய் ஈட்டும் வாய்ப்பை இழந்தது. பாசிக் நிறுவனம் கனிமநீர் ஆலையின் உற்பத்தித்திறனை குறைவாக பயன்படுத்தியது. இதனால் செலவுகளை ஈடு செய்ய முடியாமல் ரூ.1.98 கோடி இழப்பு ஏற்பட்டது.

பாசிக் நிறுவனம் துத்திப்பேட்டிலுள்ள நிலத்தை புதிய ஒப்பந்தம் மூலம் குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்காததால் 2017 முதல் 22 வரை மட்டும் ரூ.1.77 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. பிஆர்டிசியில் புதிய பஸ்கள் அறிமுகம் செய்யாததால் 2017ல் கால அளவை இழந்த பஸ்கள் 15.7 சதவீதமாக இருந்தது. இது 2021-22ல் 64.2 சதவீதமாக உயர்ந்தது. பிஆர்டிசியில் 2014 முதல் 2022 வரை 41 பஸ்கள் இயக்கப்படவில்லை. பாசிக், பாப்ஸ்கோ, பிஆர்டிசி, பிடிடிசி ஆகிய நான்கு பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த 2017 முதல் 2022 வரை ஐந்து ஆண்டுகளில் ரூ. 388.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பேட்டியின்போது முதுநிலை துணை கணகாய்வுத் தலைவர் சுகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x