Published : 11 Feb 2025 07:46 PM
Last Updated : 11 Feb 2025 07:46 PM
சென்னை: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம் அடைந்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.64,480-க்கு விற்பனையாகிறது. இதனால், நகை வாங்குவோர் வேதனை அடைந்துள்ளனர்.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு, தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த மாதம் 22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.60,200-க்கு விற்பனையானது. 24-ம் தேதி ஒரு பவுன் ரூ.60,440-க்கும், 29-ம் தேதி ரூ.60,760-க்கும் விற்பனையானது. 30-ம் தேதி ஒரு பவுன் ரூ.60,880-க்கு விற்பனையானது. மறுநாள் 31-ம் தேதியன்று ஒரு பவுன் தங்கம் ரூ.960 ஆக அகரித்து ஒரு பவுன் ரூ.61,840-க்கும் விற்பனையானது.
பிப்.1-ம் தேதியன்று பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. அன்றைய தினம், சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,790-க்கும், பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு பவுன் ரூ.62,320-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், கடந்த 5-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.63,240 உயர்ந்து புதிய உச்சம் தொட்டது.
இந்நிலையில், இன்று (பிப்.11) தங்கம் விலை அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,060-க்கும், பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு பவுன் ரூ.64,480-க்கும் விற்பனையாகி வருகிறது. இதன் மூலம், தங்கம் விலை ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.70,336-க்கு விற்பனையாகிறது.
காரணம் என்ன? - தங்கம் விலை உயர்ந்து வருவது குறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், ‘‘சர்வதேச அளவில் தங்கத்தின் குறியீடு வலுவடைந்து வருகிறது. அத்துடன், அமெரிக்க டாலரும் ரூ.87.50 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.
இவை தவிர, அமெரிக்க அதிபரின் பொருளாதாரக் கொள்கைகள், பங்குச் சந்தை சரிவு, ரியல் எஸ்டேட் சரிவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு உள்ளிட்டவையும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதே தவிர, குறைவதற்கான வாய்ப்பு கம்மியாக உள்ளது’’ என்றார்.
தங்கம் விலை தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருவதைக் கண்டு, நகை வாங்குவோர் வேதனை அடைந்துள்ளனர்.
வெள்ளி விலையில் மாற்றமில்லை: வெள்ளி விலை நேற்று எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,07,000 ஆக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT