Published : 11 Feb 2025 10:02 AM
Last Updated : 11 Feb 2025 10:02 AM
சென்னை: தங்கம் விலை இன்று புதிய உச்சம் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.11) பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்தவகையில் கடந்த டிச.8-ம் தேதிக்கு பிறகு, தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ஜன.3-ம் தேதி ரூ.58,080 ஆகவும், ஜன.16-ம் தேதி ரூ.59,120 ஆகவும் இருந்தது. ஜன.22-ம் தேதி பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்திருந்தது.
இருப்பினும், கடந்த 29-ம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஜன.31-ம் தேதி ஆபணத்தங்கம் ரூ.61 ஆயிரத்தையும், பிப்.1-ம் தேதி ரூ.62 ஆயிரத்தையும் தாண்டியது. நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தங்கம் விலை இன்றும் உயர்ந்து மற்றொரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை உச்சங்கள் நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,060-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.107 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், குறிப்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்புகள் உள்ளிட்ட கெடுபிடிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரிப்பதால் தங்கம் விலை இனி வருங்காலங்களில் குறைவதற்கான வாய்ப்பே இல்லை என்று நகை வணிகர்கள் கூறுகின்றனர். இது சாமானியர்கள் மத்தியில் பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது. அதேவேளையில் நகை விலை தொடர்ந்து உயர்வதால் வெள்ளி நகைகளில் தங்க மூலம் பூசி விற்பனை செய்யப்படும் ஆபரணங்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT