Published : 10 Feb 2025 10:02 AM
Last Updated : 10 Feb 2025 10:02 AM
பல வகை சத்துகள் நிறைந்த தில்லைநாயகம் நெல்லை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட வேண்டும் என்று மதுரையில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவில் வையை, மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் சார்பில் மதுரையின் செந்நெல் தில்லைநாயகம் பகுப்பாய்வுக் கூட்டம், உணவுத் திருவிழா நடைபெற்றது. வையை ஒருங்கிணைப்பாளர் ஆ.கருணாகர சேதுபதி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர் தங்கம் மலைச்சாமி முன்னிலை வகித்தார்.
தில்லைநாயகம் அரிசியில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து மதுரை மருத்துவக் கல்லூரி மருந்தியல் கல்லூரி இயற்கை மருந்து மூலகத் துறை உதவிப் பேராசிரியர் ஜி.சத்தியபாலன் பேசியதாவது: புரதச்சத்து அதிகமுள்ள கருப்புக்கவுனி அரிசியைப் போல் மதுரையின் பாரம்பரிய நெல்லான தில்லைநாயகம் அரிசியில் 7.15 சதவீத அளவில் புரதச்சத்து உள்ளது.
வாயுக்களையும் அணுச்செறிவையும் கொண்டு பகுப்பாய்வு செய்த ஆய்வறிக்கையின்படி இந்த அரிசியை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய், இதய நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ள முடியும். இதில் குடலுக்கு இதமான சூழலில் அதிக நார்ச்சத்து உள்ளது. தரமான கார்போஹைட்ரேட் மாவுச்சத்து 78.28 சதவீதம் உள்ளது. உடலுக்கு தேவையான கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாது உப்புகள் செறிவாக இருக்கிறது.
கருப்புக்கவுனியில் உள்ள பயோபிலவனாய்டு எனும் தாவர உயிர் வேதிப்பொருள் இந்த அரிசியில் உள்ளது. பீனாலிக் எனும் தாவர உயிர் வேதிப்பொருள் தேவையான அளவு உள்ளது. இது உடலில் உள்ள திசுக்கள் சாகாமல் பாதுகாக்கிறது. அமிலோஸ் என்பது மாவுச்சத்தில் சேர்ந்த ஒரு பொருள். இது புற்றுநோயை தடுக்கும் தாவர வேதிப்பொருள். இது இந்த அரிசியில் அதிகமாக உள்ளது.
பல வகை சத்துகள் நிறைந்த அரிசியாக தில்லைநாயகம் நெல்லை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இயற்கை விவசாயிகள் மாசாணம், அருள், கோபாலகிருஷ்ணன், அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உழவர் உற்பத்தியாளர் மைய தலைவர் கோபால் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT