Published : 10 Feb 2025 07:36 AM
Last Updated : 10 Feb 2025 07:36 AM
புதுடெல்லி: மின்னணு வர்த்தக நிறுவனங்கள் சார்பில் மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மிக குறுகிய நேரத்தில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இதே உத்தியை பயன்படுத்தி டாப்மேட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், 10 நிமிடங்களில் உங்களுக்கு தேவையான நிபுணர்களை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக டாப்மேட் நிறுவன மூத்த அதிகாரி நிமிஷா சாந்தா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் 10 நிமிடங்களில் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனம் கிடையாது. பத்தே நிமிடங்களில் மனிதர்களை (நிபுணர்களை) விநியோகம் செய்கிறோம். இந்த மனிதர்களிடம் (நிபுணர்களிடம்) நீங்கள் எந்த கேள்வியை எழுப்பினாலும் பதில் அளிப்பார்கள். உங்கள் கனவு வேலையை பெற உதவி செய்வார்கள். உங்களது வளர்ச்சியின் பங்குதாரராக இருப்பார்கள். இனிமேல் கூகுளில் எதையும் தேட வேண்டாம். எங்களது நிபுணர்களை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம். 10 நிமிடங்களில் உங்களுக்கு தேவையான ஆலோசனைகள் கிடைக்கும். இவ்வாறு நிமிஷா சாந்தா தெரிவித்துள்ளார்.
டாப்மேட் நிறுவனத்தில் மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான், பிளிப்கார்ட் உட்பட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள், சிறப்பு ஆலோசகர்களாக செயல்படுகின்றனர். பல்வேறு துறைகள் சார்ந்த சுமார் 3 லட்சம் நிபுணர்கள் தங்களோடு இணைந்திருப்பதாகவும் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் டாப்மேட் இணையத்தை அதிகம் பயன்படுத்துவதாகவும் அந்த நிறுவன அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வேலைவாய்ப்பு தகவல்கள், நேர்முக தேர்வில் எவ்வாறு செயல்பட வேண்டும், புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து இளைஞர்கள் கேட்டறிவதாக டாப்மேட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT