Published : 07 Feb 2025 07:22 PM
Last Updated : 07 Feb 2025 07:22 PM
பெங்களுரூ: நிறுவனத்தின் பெங்களூரு வளாகத்தில் அடிப்படை பயிற்சி பெற்று, மூன்று முறை முயன்றும் உள்மதிப்பீட்டு தேர்வுகளில் (internal exam) வெற்றி பெறாததால் 300 பேரை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
இன்ஃபோலிஸ் நிறுவனம் கூறியதை விட பாதிக்கப்பட்ட புதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தை நாட உள்ளதாக தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் கூட்டமைப்பான என்ஐடிஇஎஸ் தெரிவித்துள்ளது. இதனிடையே, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பொங்களுரூ தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், "இன்ஃபோசிஸில் எங்களுடைய பெங்களூரு தலைமையகத்தில் விரிவான அடிப்படை பயிற்சிக்கு பின்பு, எங்களின் உள்மதிப்பீட்டு தேர்வில் புதியவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கும் ஒரு கடுமையான பணியமர்த்தல் நடைமுறையை நாங்கள் கொண்டுள்ளோம். இரண்டு தசாப்தங்களாக இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதன் மூலம் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான திறமையாளர்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது" என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் செனட் (NITES), இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சில மாதங்களுக்கு முன்பாக அக்டோபர் 2024-ல் பணியமர்த்தப்பட்டவர்கள். அவர்கள் தங்களின் பணி நியமன ஆணையைப் பெற்ற பின்பும், இரண்டு வருட நீண்ட காத்திருப்பு நிலையைத் தாங்கி இருக்கிறார்கள். NITES மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தொடர் முயற்சிகளுக்கு பின்பே அவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்.
இப்போது பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நிறுவனத்தின் மைசூரு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு, 'பரஸ்பரமாக வெளியேறுகிறோம்' என்ற கடிதத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு NITES தொழிலார்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளது. மேலும் இதில் உடனடியாக தலையிட்டு, இன்ஃபோசிஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் வருமானத்தை கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, அந்நிறுவனம் 11.46 சதவீதம் அதிகரித்து ரூ.6806 கோடி லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைமை செயல் அலுவலர் விளக்கம்: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நச்சுக் கலாச்சார குற்றச்சாட்டு குறித்து அதன் தலைமை செயல் அலுவலர் சலீல் பரேக் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஊழியர்களின் கேள்விகளைப் பொறுத்தவரை இன்ஃபோசிஸில் அனைவரும் நியாயமான முறையில் நடத்தப்படுவதை உறுதிபடுத்தும் அணுகுமுறையை நாங்கள் கொண்டுள்ளோம். செயல்திறன் இயக்கத்தைக் கண்டறிவதற்கான நடைமுறை எங்களிடம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT