Published : 06 Feb 2025 03:46 PM
Last Updated : 06 Feb 2025 03:46 PM
நெல்லை : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.4,400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டிபி சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தமிழக முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.4,400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டிபி சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். பின்னர் டிபி சோலார் நிறுவன வளாகத்தை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து புதியதாக ரூ.3,125 கோடி முதலீட்டில் கட்டப்படவுள்ள விக்ரம் சோலார் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
தென் மாவட்ட மக்கள் வேலைவாய்ப்பில் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் வணிக உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள மிகப்பெரிய சூரிய ஒளி தகடு மற்றும் மாடுலர் தொழிற்சாலையை தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் மற்றொரு புதிய சூரிய ஒளி தகடு உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினர். திறக்கப்பட்ட புதிய தொழிற்சாலையில் 80 சதவீதம் பெண்கள் தொழிலாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நவீன உலகில், பல்வேறு காரணங்களால் மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்திய அளவில் அனல் மின்சாரம் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக உலகம் முழுவதும் அபாயக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. பூமி வெப்பமயமாதலுக்கு அனல் மின்சார உற்பத்தியும் ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது.
உலக நாடுகள் தற்போது புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் முயற்சியாக கரியமில வாயு வெளிப்பாட்டைக் குறைக்கும் வண்ணம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவதில் முனைப்புக் காட்டி வருகிறது, சூரிய ஒளி மின்சாரத்தை பெறும் வகையில் அதற்கான உதிரிபாகங்கள் தயாரிப்பையும் உள்நாட்டிலேயே மேற்கொள்வதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் முதல் மக்கள் பயன்பாடு வரை மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்று மின்சார உற்பத்தியை பெருக்கும் வகையில் சோலார் மின்சார உற்பத்தியை தொடங்க தொழில் முனைவோருக்கு அறிவுறுத்தியது.
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழில் மைய வளாகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் டாடா பவர் சோலார் மற்றும் விக்ரம் சோலார் நிறுவனங்கள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. டாடா சோலார் நிறுவனம் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வணிக உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளது.
இதன் மூலம் 3,000 மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் இந்நிறுவனத்தில் பணி செய்யும் 80 சதவீதம் தொழிலாளர்கள் பெண்களாக உள்ளனர். இதன் மூலம் அதிகம் பெண்களை கொண்டு இயக்கப்படும் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை என்ற பெருமையையும் இந்த ஆலை பெற்றுள்ளது.
இந்த ஆலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த ஆலையில் சூரிய மின்சார தகடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உயர்ந்த தரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் சோலார் தகடுகள், மின் கலன்கள் பசுமையான மின்சார உற்பத்திக்கான எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது.
இதே போல் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் விக்ரம் சோலார் நிறுவனம் தமிழ்நாட்டில் 3 ஜிகாவாட் சோலார் செல் மற்றும் சோலார் மாடுல் உற்பத்தி தொழிற்சாலையை ரூ. 3125 கோடி மதிப்பில் அமைப்பதற்கான அடிக்கல்லையும் முதல்வர் நாட்டினார். இந்த நிறுவனத்தின் மூலம் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT