Published : 06 Feb 2025 09:36 AM
Last Updated : 06 Feb 2025 09:36 AM
காரைக்குடி: செட்டிநாடு விமான நிலையம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு அரசு கால்நடை பண்ணை 1,907 ஏக்கரில் உள்ளது. இங்கு இரண்டாம் உலக போரின்போது 1944-ம் ஆண்டு அமைக்கப்பட்ட 2 விமான ஓடுதளங்கள் உள்ளன. அவை தற்போது வரை பெரிய அளவில் சேதமடையாமல் உள்ளது.
காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அடிக்கடி விமானம் மூலம் நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதுதவிர கல்வி, பணி நிமித்தமாக வெளிநாடு செல்வோரும் அதிகளவில் உள்ளனர். மேலும் காரைக்குடி, செட்டிநாடு, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வருகின்றனர்.
ஆத்தங்குடி டைல்ஸ், செட்டிநாடு கண்டாங்கி சேலைகள், அரியக்குடி குத்துவிளக்குகள், செட்டிநாடு கலைப்பொருட்கள் ஆகியவை உலகப் புகழ் பெற்றவை. அவற்றை வாங்க பல்வேறு நாடுகளில் இருந்து வணிகர்கள் அதிகளவில் வருகின்றனர். மேலும் இப்பகுதிகளில் அடிக்கடி திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புகள் நடக்கின்றன. இதனால் திரைத்துறையினரும் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது மதுரை, திருச்சி விமான நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காரைக்குடி பகுதியில் விமான சேவை முக்கிய தேவையாக உள்ளது.
ஏற்கெனவே ‘உடான்’ திட்டத்தில் செட்டிநாட்டில் உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்து கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் இந்திய விமான சேவைக் கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் விமானிகள் பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து விமான நிலையம் அமைக்க மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு நேமத்தான்பட்டி ரயில் நிலைய மீட்பு குழுவினர், காரைக்குடி தொழில் வணிக கழகத்தினர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆதிஜெகநாதன், தொழில் வணிக கழகத் தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் கண்ணப்பன், ஆகியோர் கூறியதாவது: விமானத்தில் பயணிக்க கூடிய முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாக காரைக்குடி உள்ளது. மேலும் விமான நிலையம் அமைக்க தேவையான இடம், ஓடுதளம் உள்ளது. இதனால் விமான நிலையம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். தற்போது மத்திய அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது. இதனால் காரைக்குடி பகுதியும் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT