Published : 03 Feb 2025 08:25 PM
Last Updated : 03 Feb 2025 08:25 PM
மதுரை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கென மத்திய பட்ஜெட்டில் ரூ. 6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோட்ட நிர்வாகம் கூறியது: மதுரை ரயில் நிலையத்தின் மறு சீரமைப்பு பணி ரூ.413 கோடியில் நடக்கிறது. இதுவரை கிழக்கு நுழைவாயில் பகுதியில் பல அடுக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகன காப்பகங்கள் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ரயில் பாதைக்கு மேல்புறம் பயணிகள் வசதிகளுக்கான அரங்கு அமைக்க அடித்தளமிடும் பணி நடக்கிறது.
கிழக்கு நுழைவாயில் பகுதியில் முகப்பு கட்டிடம் கட்டுதல், பயணிகளுக்கு தொந்தரவு இன்றி பார்சல்களை கையாளும் தனி நடை மேம்பாலம், ரயில் நிலையம்- பெரியார் பேருந்து நிலையம் இணைக்கும் சுரங்கப்பாதை பணிகளும் தீவிரமாக நடக்கின்றன.
ராமேசுவரம் ரயில் நிலையம்: ராமேசுவரம் ரயில் நிலையத்திலும் ரூ. 113 கோடியில் மறுசீரமைப்பு நடக்கிறது. பார்சல் ஆபீஸ் கட்டுமானம், ரயில் நிலைய நுழைவு வளைவு அருகே இருந்த வணிக வளாக கட்டிடம், பயணிகள் தங்கும் அறைகளாக மாற்றியது, வடக்கு பகுதியில் ரயில் நிலைய கட்டிடம், ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்லும் பயணிகள் சென்று வர தனி பாதை அமைக்கும் பணிகளும் நிறைவுற்றன.
கிழக்குப் பகுதியில் ரயில் நிலைய கட்டிடம், ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகளுக்கு தனிப்பாதை , நடைமேடை மேம்பாட்டு மற்றும் உப்பு நீரை குடி நீராக்கும் அமைப்பு போன்ற பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.
அம்பாசமுத்திரம், திண்டுக்கல், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, பழனி, பரமக்குடி, புதுக்கோட்டை, ராஜபாளையம், ராமநாதபுரம், சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தி அமிர்த பாரத் ரயில் நிலையங்களாக மாற்றும் பணிகளும் தொடர்ந்து நடக்கின்றன.
மத்திய பட்ஜெட் : மேற்கண்ட பணிகள், தமிழக வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 10 ஆண்டுக்கு முன்பு இருந்த நிதி ஒதுக்கீட்டைக் காட்டிலும் 7.5 மடங்கு அதிகம். தமிழகத்தில் 2014 -ல் இருந்து 1303 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த இலங்கை நாட்டிலுள்ள ரயில் பாதை அளவுக்கு நிகரானது. தமிழகத்தில் மொத்த ரயில் பாதைகளில் 94 சதவீத பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT