Published : 03 Feb 2025 04:44 PM
Last Updated : 03 Feb 2025 04:44 PM
புதுடெல்லி: உடான் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவுபெற்றது. நெய்வேலி, வேலூருக்கு விரைவில் விமான சேவை தொடங்கும் என்று மத்திய இணையமைச்சர் முரளிதர் மொஹல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மாநிலங்களுக்குள்ளாக மண்டலங்களை விமான சேவை மூலம் இணைக்க வகை செய்யும் உடான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள விமான நிலையங்கள் எவை? அதற்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளன? எப்போது அவை பயன்பாட்டுக்கு வரும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹல் அளித்த பதில்: விமான சேவை மூலம் மண்டலங்களை இணைக்கும் உடான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த ஊர்களில் விமான நிலையங்களை அமைக்கும் பணியும், மேம்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. இதில் சேலத்திலிருந்து விமான சேவை தொடங்கப்பட்டுவிட்டது.
நெய்வேலி மற்றும் வேலூரில் விமான நிலையப் பணிகள் நிறைவடைந்து, அது தொடர்பான லைசென்ஸ்களைப் பெறும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த இரண்டு ஊர்களிலும் விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது. ராமநாதபுரத்தில், விமானநிலையம் அமைக்கத் தேவையான இடத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருக்கிறது. தஞ்சாவூரில் விமான நிலைய அணுகு சாலைக்கான இடம் விமான நிலைய ஆணையத்தின் வசம் வந்ததும் கட்டடப் பணிகள் தொடங்கும்.
இதுதவிர, தமிழ்நாட்டில் அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படாமல் இருக்கும் விமான ஓடுபாதைகளை சீர்படுத்தி அவற்றை உடான் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏலம் விடவும் துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. உடான் திட்டம் என்பது, வணிகம் சார்ந்த ஒரு திட்டமாகும். உடான் திட்டத்தின் கீழ் ஒரு மார்க்கத்தில் விமான சேவை தொடங்கப்பட்டால், அதற்கு கிடைக்கும் வரவேற்பு, கூடுதல் தேவை உள்ளிட்ட பல காரணிகளை வைத்து அவ்வப்போது அந்த விமான மார்க்கத்திற்கான ஏலம் நடைபெறும்.
விமானங்களை இயக்கும் நிறுவனங்கள் இத்தகைய விமான மார்க்கங்களை தொடர்ச்சியாக கண்காணித்து ஏலத்தில் பங்கேற்பார்கள். ஏலத்தின் முடிவில் விருப்பமுள்ள, தகுதியான நிறுவனத்திற்கு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் முரளிதர் மொஹல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT