Published : 02 Feb 2025 09:24 AM
Last Updated : 02 Feb 2025 09:24 AM
புதுடெல்லி: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நிதித் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் புதிய வருமான வரி விகிதத்தில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாயில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த இழப்பு மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் தாராளமாக செலவு செய்வார்கள். இதன்காரணமாக ஜிஎஸ்டி வரி, சுங்க வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் மத்திய அரசுக்கு போதிய வருவாய் கிடைத்துவிடும்.
நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்குள்ளேயே வருவாய் ஈட்டுகின்றனர். புதிய வரி விகிதத்தால் அவர்கள் பலன் அடைவார்கள். சம்பளதாரர்கள் அதிகபட்சமாக ஓராண்டில் ரூ.60,000 வரை சேமிக்க முடியும். ஒருவருக்கு ரூ.10,000 வரை வரி சேமிப்பு கிடைக்கிறது என்றால் அவர் நிச்சயமாக ரூ.8,000 வரை செலவு செய்வார். இதன்மூலம் பல்வேறு வகைகளில் மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்கும்.மேலும் புதிய வரி விகிதத்தால் வாகன விற்பனை, ரியல் எஸ்டேட் துறை அபரிமிதமாக வளர்ச்சி அடையும்.
நாடு முழுவதும் ஒரே வருமான வரி விகிதமே நடைமுறையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் பழைய வரி விகிதம் நிச்சயமாக ஒருநாள் ரத்து செய்யப்படும். இவ்வாறு நிதித் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT