Published : 02 Feb 2025 07:15 AM
Last Updated : 02 Feb 2025 07:15 AM
மத்திய அரசின் புதிய வருமான வரிவிதிப்பு முறைப்படி ரூ.12,75,000க்கு மேல் கூடுதலாக ஒரு ரூபாய் அதிக வருமானம் இருந்தால்கூட ரூ.60 ஆயிரம் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போதைய பட்ஜெட் அறிவிப்பின்படி புதிய வரிவிதிப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முழு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலையான கழிவுத் தொகை ரூ.75 ஆயிரத்தையும் சேர்த்தால் ரூ.12,75,000 வரை ஆண்டு வருமானம் உள்ள மாத ஊதியம் பெறுவோர் இனி வருமான வரி செலுத்த வேண்டியிருக்காது. இப்படி பார்த்தால் மாதம் ரூ.1,06,250 வரை ஊதியம் பெறுபவர்களுக்கு வரி கிடையாது. அதே நேரத்தில் மாத வருமானத்திலோ, ஆண்டு வருமானத்திலோ மிகச் சிறிய உயர்வு இருந்தால்கூட குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
உதாரணமாக ஒருவரது ஆண்டு வருமானம் ரூ.1 அதிகரித்தால் கூட அவரது வருமானம் ரூ.12 லட்சத்துக்கு மேலே சென்று விடுகிறது. ரூ.12 லட்சம் வரை மட்டுமே வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலே சென்றால் புதிய வரி விகிதங்கள் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும். அதன்படி, வருமானத்தின் முதல் ரூ.4 லட்சத்துக்கு வரி இல்லை. அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 5 சதவீதம் அடிப்படையில் ரூ.20 ஆயிரம், அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 10 சதவீதம் அடிப்படையில் ரூ.40 ஆயிரம் என மொத்தம் ரூ.60 ஆயிரம் வரியாக செலுத்த வேண்டும்.
பழைய வரி விதிப்புமுறைப்படி கணக்கிட்டாலும் ரூ.60 ஆயிரத்துக்கு மேலே செலுத்த வேண்டியுள்ளது. பழைய முறைப்படி, முதல் ரூ.2.50 லட்சத்துக்கு வரி எதுவும் இல்லை. அடுத்த ரூ.2.50 லட்சத்துக்கு 5 சதவீதம், அடுத்த ரூ.5 லட்சத்துக்கு 20 சதவீதம், அதற்கு மேல் 30 சதவீதம் என வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் ரூ.12 லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேல் கூடுதலாக ஒரு ரூபாய் வருமானம் பெறும் ஒருவர், வீட்டுக் கடன், கல்விக் கடன், சேமிப்பு, மருத்துவ செலவு என வரிவிலக்கு பெறத் தகுதியுள்ள பல்வேறு இனங்களில் சேர்த்து ரூ.5,37,500 அளவுக்கு கழிவு பெற வேண்டும். அப்போதுதான், மீதமுள்ள ரூ.7,37,500க்கு ரூ.60 ஆயிரம் வரி செலுத்தலாம்.
ஆனால் வெகுசிலருக்கே இந்த அளவுக்கு அதிகமான தொகையை கழிவு பெற முடியும். மிகப் பெரும்பாலானோருக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை மட்டுமே கழிவு பெற முடியும் என்பதால், பழைய முறைப்படி ரூ.60 ஆயிரத்துக்கும் அதிகமாகவே வரி செலுத்த வேண்டியிருக்கும். இதன் காரணமாக புதிய முறையையே தேர்வு செய்தாக வேண்டும். ஆகவே, ரூ.12 லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேல் கூடுதலாக ஒரு ரூபாய் அதிக வருமானம் இருந்தால்கூட, குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் வரி செலுத்த வேண்டியது கட்டாயம் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT