Published : 01 Feb 2025 09:43 PM
Last Updated : 01 Feb 2025 09:43 PM
கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கோவை பிரிவு அலுவலகத்தில் மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கோவையில் செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதில், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை பிரிவு தலைவர் ராஜேஷ் பி.லுந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை இருப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க அம்சமாகும். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இது தொழில் துறையை வலுப்படுத்த உதவும்.
வரி, மின்சாரம், சுரங்கம், விவசாயம், நகர மறுசீரமைப்பு கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாக கொள்ளும் அளவுக்கு வசதிகள் மேம்படுத்துதல், சிறு, குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கும் திட்டம், மாவட்டங்களில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் தொழில்முனைவோருக்கான திட்டம், சிறு, குறு நிறுவனங்களில் உள்ள ஆள் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் திறன் மேம்படுத்துதல் பயிற்சி மையங்கள் அமைக்கும் திட்டங்கள், ஜல் ஜீவன் திட்ட விரிவாக்கம், விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வசதி ஆகிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.
மருத்துவத் துறையில் உயிர் காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துதல், அணு ஆற்றல் மையங்கள் ஏற்படுத்துதல் ஆகியவை வரவேற்கத்தக்கதாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு மையங்கள் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். அப்போது, இந்திய தொழில் வர்த்தக சபை கோவை பிரிவு செயலாளர் பிரதீப், முன்னாள் தலைவர் நந்தகுமார், துணைத் தலைவர்கள் எஸ்.நடராஜன், சி.துரைராஜ், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ், தென்னிந்திய நூற்பாலைகள் அதிபர்கள் சங்கம் (சிஸ்பா) துணை தலைவர் பிரதீப், இந்திய பம்ப் உற்பத்தியாளர் சங்க (இப்மா) தலைவர் கார்த்திக், ஆடிட்டர்கள் மகேந்திரன், ரவி, பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT