Last Updated : 01 Feb, 2025 08:36 PM

 

Published : 01 Feb 2025 08:36 PM
Last Updated : 01 Feb 2025 08:36 PM

சிறு தொழில்களுக்கும், சாதாரண மக்களுக்கும் சாதகமான பட்ஜெட்: கோவை தொழில் துறையினர் வரவேற்பு

கோவை: மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து தொழில்துறையினர் வரவேற்பு அளித்தும், எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் எஸ்.கே.சுந்தரராமன்: மத்திய பட்ஜெட் அறிவிப்புகள், ஜவுளித் தொழிலின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்கும். ஏற்றுமதி ஊக்குவிப்புப் பணியை எளிதாக்க ஏற்றுமதிக் கடன், எல்லை தாண்டிய காரணி ஆதரவு மற்றும் நிலைத்தன்மை, காலநிலை சான்றிதழ்கள் போன்ற கட்டணமில்லாத நடவடிக்கைகளை சமாளிக்கும்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ்: பெரும்பாலான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலதன நெருக்கடியை சந்தித்து வருவதால் மூலதன வரம்பை 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்தல் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்திருந்தோம். அதேவேளையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூலதன செலவு அதிகரித்தல் போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு வட்டி மானிய அறிவிப்புகள் ஏதும் வரவில்லை.

கொடிசியா தலைவர் கார்த்திகேயன்: மத்திய பட்ஜெட்டில் விவசாயம், குறு, சிறு தொழில்நிறுவனங்கள், முதலீடு மற்றும் ஏற்றுமதி ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. பெரும்பாலான எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு பயனளிக்கும் தொழில்களில் சூரிய மின்சக்தியை நிறுவும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு கடன் ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) தலைவர் ராதாகிருஷ்ணன்: கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. புதிய உலகளாவிய திறன் மையங்களை (ஜி.சி.சி.) ஈர்ப்பது, மருத்துவ சுற்றுலாத் தலமாக ஊக்குவிப்பது மற்றும் மின்னணு மையமாக உருவாகி வருவது ஆகியவை கோவையை ஈர்ப்பதாக உள்ளது. ஜவுளித் துறையின் மறுமலர்ச்சி மற்றும் பருத்தி சாகுபடியில் தொழில்நுட்பத்தை சேர்ப்பது ஆகியவை நகரத்திற்கு கணிசமாக பயனளிக்கும்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டாக்ட்) தலைவர் ஜே.ஜேம்ஸ்: குறு, சிறு தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு எந்தவிதமான அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதம் அறிவிப்பு இல்லாதது, சர்பாஸ் சட்டம் 180 நாட்களுக்கு மாற்றித் தரும் கோரிக்கை ஏற்கப்படவில்லை. குறு, சிறு தொழில்களுக்கான வங்கியில் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு மற்றும் கோவையில் குறுந்தொழில்கள் பேட்டைகள் அமைக்க தனி நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு ஒன்றும் இல்லை.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் கே.மணிராஜ்: விவசாயத்துக்கு உயிர் நாடியான பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. குறுந்தொழில்முனைவோர் வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு, மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சி.சிவக்குமார்: வங்கி வட்டி விகிதம் மற்றும் பரிவர்த்தனை கட்டணங்கள் குறைக்கப்படுதல், கோவை மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்படுதல் ஆகிய தொழில்முனைவோர்களின் நீண்ட நாள் கோரிக்கையை எதிர்காலங்களில் நிறைவேற்றித்தர வேண்டும்.

தமிழ்நாடு பம்ப்ஸ் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (டேப்மா) தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம்: இந்த பட்ஜெட் சாதாரண மக்களுக்கு பயனளிப்பதாகவும் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பாக சிறு தொழில்களுக்கு சாதகமான பட்ஜெட் ஆகும்.

ஓஸ்மா தலைவர் அருள்மொழி: காட்டன் விளைச்சல் அதிகரிக்க விவசாயிகளுக்கான 5 ஆண்டு காட்டன் திட்டம் ஜவுளி தொழில் வளர்ச்சி பெற உதவியாக இருக்கும். 10 வகை பின்னலாடை துணிகளுக்கு இறக்குமதி வரி 20 சதவீதம் அல்லது கிலோவுக்கு ரூ.115 விதித்துள்ளது உள்ளூர் ஜவுளி உற்பத்தியாளர்களை காப்பாற்றும்.

இந்திய டெக்ஸ்பிரணர்ஸ் கூட்டமைப்பின் (ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன்:பருத்தி உற்பத்தி அதிகரிப்பு சிறப்புத் திட்டம் இந்தியாவில் பருத்தி மகசூலை 450-500 கிலோ ஒரு ஹெக்டேருக்கு என்ற நிலையில் இருந்து 1,000 கிலோ வரை உயர்த்த உதவும் திட்டமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் ஜெயபால்: பருத்தி இறக்குமதி வரி 11 சதவீத ரத்து மற்றும் சர்வதேச விலையைவிட 15 முதல் 30 சதவீதம் அதிகம் உள்ள பாலிஸ்டர் மற்றும் விஸ்கோஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் வராதது, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கி வட்டி விகிதத்தை குறைக்க அறிவிப்பு வராதது போன்றவை ஏமாற்றம் அளிக்கிறது.

இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.வி.கார்த்திக்: ஜல் ஜீவன் இயக்கத்தை 2028 வரை நீட்டிப்பது பம்ப் உற்பத்தியாளர்களுக்கு வணிக வாய்ப்புகளை அதிகரிக்கும். உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் அணு ஆற்றல் மையங்கள் இந்தியாவில் தொழில்களுக்கு புதிய வாய்ப்பை வழங்கும்.

தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் (டீகா) தலைவர் பிரதீப்: மின்சார வாகனம், செல்போன் பேட்டரி, லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான விநியோகச் சங்கிலியை மேம்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி குறைய வாய்ப்புள்ளது.

கோவை நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி சபரிநாத்: தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் குறைக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதுகுறித்த அறிவிப்பு வரவில்லை. இது ஏமாற்றம்.

ஆடிட்டர் கார்த்திகேயன்: நடுத்தர வர்க்கத்தினருக்கு ரூ.12 லட்சம் வரை வரி இல்லை என்பது 1997-ம் ஆண்டுக்கு பிறகு வருமான வரி விலக்குகளில் ஏற்படுத்தப்பட்ட பெரிய தளர்வு என்று சொல்லலாம்.

ஏற்றுமதியை மற்றும் வேலைவாய்ப்பு ஊக்குவிக்க, காலணி மற்றும் தோல் துறைகளுக்கான ‘ஃபோகஸ் தயாரிப்பு திட்டம்’ இந்தியாவை உலகளாவிய பொம்மை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான திட்டம், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் ஆகியவை இந்தியாவின் உற்பத்தியை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x