Published : 01 Feb 2025 07:17 PM
Last Updated : 01 Feb 2025 07:17 PM
புதுடெல்லி: நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் மொத்த வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி இல்லை. அதாவது, மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு விகித வருமானத்தைத் தவிர மாதத்துக்கு சராசரி வருமானம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
அத்துடன், நிலையான கழிவுத் தொகை ரூ.75,000 அளிக்கப்படுவதன் காரணமாக ரூ.12.75 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்று 2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிய முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரிய நிம்மதி தரும் அம்சமாக பார்க்கப்படுகிறது.
புதிய வருமான வரி விதிப்பு முறையின்படி, ரூ.12,75,000-க்கு மேல் கூடுதல் வருவாய் ஈட்டுவோர் செலுத்த வேண்டிய வரி விகிதம் இது:
ரூ.4 லட்சம் வரை - வரி இல்லை
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5%
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10%
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை - 15%
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை - 20%
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை - 25%
ரூ.24 லட்சத்துக்கு மேல் 30%
ரூ.12 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முதல் ரூ.4 லட்சத்துக்கு வரி இல்லை. அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 5% அடிப்படையில் ரூ.20,000, அதற்கு அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 10% அடிப்படையில் ரூ.40,000 என மொத்தம் ரூ.60,000 வரியாக செலுத்த வேண்டும் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
பழைய வரி விதிப்பு முறைப்படி செலுத்த வேண்டிய வரி விகிதம்:
ரூ.2.50,000 வரை - வரி இல்லை.
ரூ.2,50,001 முதல் ரூ.5,00,000 வரை - 5%
ரூ.5,00,001 முதல் ரூ.10,00,000 வரை - 20
ரூ.10,00,000-க்கு மேல் - 30%
பழைய வரி விதிப்பு முறைப்படி கணக்கிடும்போது கூட, வீட்டுக் கடன், கல்விச் செலவு, சேமிப்பு, மருத்துவச் செலவு, காப்பீடு போன்றவற்றை வைத்து வரி விலக்குக்காக ரிட்டர்ன் ஃபைல் செய்தால் கூட, ஆண்டுக்கு ரூ.60,000 செலுத்த வேண்டிய சூழலே பலருக்கும் ஏற்படலாம். ஏனெனில், மிகச் சிலருக்கே அதிக தொகை ரிட்டர்ன் வரக்கூடும்.
எனவே, பழைய வரி விதிப்பு முறைப்படி ரூ.60,000-க்கும் மேலாக வரி செலுத்திய வேண்டிய நிலை வரலாம் என்பதால், பெரும்பாலானோரும் புதிய வரி விதிப்பு முறைக்கே மாற வாய்ப்புகள் அதிகம். அத்துடன், ரிட்டர்ன் ஃபைல் செய்வதற்கான நடைமுறைச் சிக்கல்களும் இதில் ஒரு காரணியாக அமையும். | வாசிக்க > ரூ.12 லட்சம் வரை ‘No Tax’, விலை உயரும், குறையும் பொருட்கள்: பட்ஜெட் 2025-ன் டாப் 10 ஹைலைட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT