Published : 01 Feb 2025 02:56 PM
Last Updated : 01 Feb 2025 02:56 PM

எவற்றுக்கு இனி விலை உயர்வு, விலை குறைவு? - மத்திய பட்ஜெட் 2025 தாக்கம்

நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் காரணமாக சில பொருள்களின் விலை குறைகின்றன. அதேபோல் வரி விலக்கு ரத்து மற்றும் புதிய வரி விதிப்புகள் காரணமாக சில பொருள்களின் விலை அதிகரிக்கவுள்ளன.

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார். அதில் மாதாந்திர ஊதியதாரர்களுக்கு மிகப் பெரிய சலுகை அறிவித்துள்ளார். ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், மொபைல் போன்கள், சார்ஜர்கள், மற்றும் சில புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட பொருள்களுக்கும் வரி சலுகையை அறிவித்துள்ளார். அதேபோல், தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரி 6 சதவீதமும், பிளாட்டினம் மீதான வரி 6.4 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. ஃபெர்ரோனிகெல் மற்றும் பிலிஸ்டர் காப்பருக்கான அடிப்படை சுங்க வரியை (basic customs duty) நீக்குவதற்கும் நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

மத்திய பட்ஜெட் 2025 தாக்கலுக்கு பின்பு விலை அதிகரிக்கும், குறையும் பொருள்களின் விவரம்: விலை குறையும் பொருள்கள் - புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகள்: 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

> மின்னணு பொருள்கள்: செல்போன்கள் மற்றும் அதைச் சார்ந்த பிற பொருள்களுக்கான அடிப்படை சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

> கோபால்ட் பவுடர் மற்றும் கழிவு, லித்தியம் அயன் பேட்டரி கழிவுகள், ஈயம், துத்தநாகம் போன்ற 12 முக்கியமான தாது பொருள்களுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

> மின்சார வாகனங்கள்: விலக்கு அளிக்கப்பட்டுள்ள மூலதனப் பொருள்களில், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்புக்கான 35 கூடுதல் பொருள்களும், மொபைல் போன் பேட்டரி தயாரிப்புக்கான 12 கூடுதல் பொருள்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

> தோல் ஜாக்கெட், ஷூக்கள், பெல்ட், பர்ஸ்கள் விலை குறைகின்றன.

> உறைந்த மீன் பேஸ்ட் (சுரிமி): உறைந்த மீன் பேஸ்ட் (சுரிமி) தயாரிப்புக்கான உற்பத்தி மற்றும் அதன் மூலப்பொருள் ஏற்றுமதிக்கான சுங்க வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

விலை அதிகரிக்கும் பொருள்கள்:

> ஃபிளாட் பேனல் டிஸ்ப்ளேக்களுக்கான அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொலைக்காட்சி மற்றும் மொபைபோன்கள் விலையை பாதிக்கும்.

> சமூக நல கூடுதல் கட்டணங்கள்: செஸ் வரியின் கீழ் இருந்த 82 கட்டண வரிகளுக்கான விலக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து 8-வது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த பட்ஜெட் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகள் அனைவருக்குமான வளர்ச்சி அல்லது அனைத்து பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என்ற தனித்துவமான வாய்ப்பினை வழங்கும் என்றார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு பின்பு அமைந்த மோடி 3.0 அரசின் இரண்டாவது முழுமையான பட்ஜெட் இதுவாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x