Published : 01 Feb 2025 02:46 PM
Last Updated : 01 Feb 2025 02:46 PM

ரூ.12 லட்சம் தாண்டினால் ரூ.4 லட்சத்தில் இருந்து கணக்கிப்படும் வருமான வரி எவ்வளவு?

புதுடெல்லி: ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை இருப்பவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரூ.12 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து வரி கணக்கிடப்படும்.

2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்தார். "புதிய முறையின் கீழ் ரூ.12 லட்சம் வருமானம் வரை (அதாவது மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு வருமானத்தைத் தவிர மாதத்துக்கு ரூ.1 லட்சம் சராசரி வருமானம் வரை) வருமான வரி செலுத்த தேவையில்லை என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் வரி செலுத்துவது கணிசமாகக் குறையும். அவர்களின் கைகளில் அதிக பணத்தை இது விட்டுச்செல்லும். இது வீட்டுச் செலவு, சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்கும்" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதிய வரி விதிப்பின்படி, ரூ.75 ஆயிரம் வரை கூடுதல் விலக்கு இருப்பதால், வருமானம் ஈட்டும் தனிநபர்கள் ரூ.12.75 லட்சம் வரை எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. அதேநேரத்தில், ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு, ரூ.4 லட்சத்தில் இருந்தே வருமான வரி பிடித்தம் செய்யப்படும். ரூ.4 லட்சம் வரையிலான வருமானத்துக்கு பூஜ்ய வரி, ரூ.4 முதல் 8 லட்சம் வரை வருமானத்துக்கு 5 சதவீதம் வரி, ரூ. 8-12 லட்சம் வரை 10 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்படும்.

ரூ. 12-16 லட்சம் வரை 15 சதவீதம் வரி, ரூ.16 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீத வருமான வரி, ரூ. 20-24 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 25 சதவீத வருமான வரி, ரூ.24 லட்சத்துக்கு மேல் உள்ள வருவாய்க்கு ஆண்டுக்கு 30 சதவீத வருமான வரி விதிக்கப்படும். ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ள வரி செலுத்துபவருக்கு புதிய வருமான வரி விதிப்புபடி, ரூ.80,000 வரி சலுகை கிடைக்கும். ரூ. 18 லட்சம் வருமானம் உள்ள ஒருவருக்கு ரூ.70,000 வரி சலுகை கிடைக்கும். ரூ.25 லட்சம் வருமானம் உள்ள ஒருவருக்கு ரூ. 1.10 லட்சம் பலன் கிடைக்கும்.

இதர அறிவிப்புகள்: மூத்த குடிமக்களுக்கான வட்டி மீதான வரி விலக்குக்கான வரம்பு தற்போதைய ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

> வாடகை மீதான டிடிஎஸ்-க்கான ஆண்டு வரம்பு ரூ.2.40 லட்சமாக இருப்பதை ரூ.6 லட்சமாக உயர்த்தும் அறிவிப்பும் அடங்கும்.

> எந்தவொரு மதிப்பீட்டு ஆண்டிற்கும் புதுப்பிக்கப்பட்ட வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கால வரம்பை, தற்போதைய 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

> சிறிய தொண்டு அறக்கட்டளைகள் / நிறுவனங்களின் பதிவு காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிப்பதன் மூலம் நடைமுறை சிரமங்கள் குறையும்.

> உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, பரிமாற்ற விலை நிர்ணய செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. வழக்குகளைக் குறைப்பதற்கும் சர்வதேச வரிவிதிப்பைக் குறைப்பதற்கும், பாதுகாப்பான துறைமுக விதிகளின் நோக்கம் விரிவுபடுத்தப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x