Published : 01 Feb 2025 08:11 AM
Last Updated : 01 Feb 2025 08:11 AM
தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.61,840-க்கு விற்பனையானது. இது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு, தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த டிச.25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,800-க்கு விற்பனையானது. பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 29-ம் தேதி ரூ.60,760-க்கும் விற்பனையானது. நேற்றுமுன்தினம் ஒரு பவுன் ரூ.60,880-க்கு விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் ஒரு பவுன் தங்கம் நேற்று ரூ.960 அதிரடியாக உயர்ந்தது. இதன்படி, சென்னையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,730-க்கும், பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ஒரு பவுன் ரூ.61,840-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சொக்கத் தங்கத்தின் விலை ரூ.67,456-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை அதிகரிப்பு: வெள்ளி விலை ஒரு கிராம் நேற்று ரூ.106-ல் இருந்து ரூ.1 அதிகரித்து ரூ.107-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,07,000 ஆக உள்ளது.
தங்கம் விலை அதிகரித்து வருவது குறித்து, நகை வியாபாரிகள் கூறுகையில், ``பண்டிகைக் காலம், டாலர் மதிப்பு உயர்வு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், தற்போது அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றுள்ளதையடுத்து, அவர் பல்வேறு பொருளாதார முடிவுகளை அதிரடியாக எடுத்து வருகிறார்.
இது, உலக பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதி, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாக்கும் நோக்கில், பங்குச் சந்தையிலிருந்து எடுத்து தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.
மேலும், தை, மாசி மாதங்கள் திருமணம், புதுமனை புகுதல் உள்ளிட்ட சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இத்தகைய பல்வேறு காரணிகளே தங்கம் விலை உயர்வுக்கு காரணம்'' எனத் தெரிவித்தனர்.
தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை வைத்திருப்பவர்களுக்கு தங்கம் விலை உயர்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT