Published : 31 Jan 2025 05:33 PM
Last Updated : 31 Jan 2025 05:33 PM
புதுடெல்லி: “சர்வதேச அளவில் சேவைத் துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், உயர் தொழில்நுட்பம் மற்றும் நடுத்தர தொழில்நுட்பத் தொழில்களில் சீனாவின் ஆதிக்கம் ஈடு இணையற்றதாகவே உள்ளது” என்று தலைமை பொருளாதார ஆலோசகர் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2025-26-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தலைமை பொருளாதார ஆலோசகர் நாகேஸ்வரன், நாட்டின் பொருளாதார நிலை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், "உள்கட்டமைப்பு அடிப்படையில், இந்தியா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. புதிய ரயில்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் காரணமாக நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சேவைத் துறையில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் உயர் தொழில்நுட்பம் மற்றும் நடுத்தர தொழில்நுட்பத் தொழில்களில் சீனாவின் ஆதிக்கம் ஈடு இணையற்றதாகவே உள்ளது. உலகமயமாக்கல் சகாப்தத்தின் விளைவாக சீனா ஓர் உற்பத்தி சக்தியாக உயர்ந்துள்ளது. சீனாவின் இருப்பு பரவலாகவும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் உள்ளது. உலக மொத்த உற்பத்தியில், சீனாவின் பங்கு அடுத்த பத்து நாடுகளின் ஒருங்கிணைந்த பங்கை விட அதிகம். இது அவர்களுக்கு பல விஷயங்களில் நன்மைகளை வழங்கக் கூடியதாகவும், தூண்டுகோலாகவும் உள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் விவசாயத்தின் பங்களிப்பை 0.75% முதல் 1% வரை உயர்த்துவதற்கு போதுமான வாய்ப்புகள் உள்ளன. எனவே, விவசாயத்தை எதிர்காலத் துறை என்று நாங்கள் அழைக்கிறோம். நுண்ணீர் பாசனத்தின் கீழ் உள்ள பரப்பளவு 3 மடங்கு அதிகரித்துள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியாவின் வளர்ச்சி சராசரியை உயர்த்த, கட்டுப்பாடுகள் நீக்கப்படும். இதன்மூலம் மக்கள் பலனைப் பெறுவார்கள். 'வழக்கமான வணிக முறை' நாட்டின் பொருளாதார தேக்கநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், பொருளாதார வளர்ச்சி தேக்கநிலைக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT