Published : 30 Jan 2025 06:10 PM
Last Updated : 30 Jan 2025 06:10 PM
மதுரை: ஜனவரி மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால் இன்று மதுரை மல்லிகைப் பூ கிலோ ரூ.4,200க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் உள்ள முக்கியமான மலர் சந்தைகளில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் முக்கியமானது. இந்த மார்க்கெட்டிற்கு, தென் மாவட்டங்களில் இருந்து பூக்கள் அதிகளவு வருகிறது. பூக்களில் மனமும், நிறமும் மிகுந்த மதுரை மல்லிகைப்பூக்கள், இந்த சந்தைக்கு அதிகளவு வரும். மல்லிகைப் பூக்களுக்கு விழாக்காலங்கள் மட்டுமில்லாது சாதாரண நாட்களிலும் பெரும் வரவேற்பு இருக்கிறது.
'கரோனா'வுக்கு பிறகு மல்லிகை சாகுபடி குறைந்ததால் பூக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், சாதாரண முகூர்த்த நாட்களில் கூட மல்லிகைப்பூக்கள் விலை உச்சத்திற்கு சென்றுவிடுகிறது. தொடர் பனிப்பொழிவு காரணமாக தற்போது மதுரை மல்லிகைப்பூ விளைச்சலுக்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், மல்லிகைப்பூக்கள் வரத்து மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு வருகை குறைந்தது. அதனால், மல்லிகைப் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்தச் சூழலில் தற்போது ஜனவரி மாதத்தின் கடைசி முகூர்த்தம் மற்றும் தொடர் முகூர்த்த நாட்கள் என்பதால் மல்லிகைப் பூ மற்றும் பிற பூக்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. மதுரை மல்லிகைப் பூவின் விலை மட்டும் கிலோ ரூ.4,200 ஆக உயர்ந்துள்ளது.
மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், ''மதுரை மல்லி கிலோ ரூ.4,200, மெட்ராஸ் மல்லி ரூ.1,500, பிச்சி ரூ.2,000, முல்லை ரூ.2000, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.2,000, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.230, பன்னீர் ரோஸ் ரூ.300, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.250, தாமரை (ஒன்றுக்கு) ரூ.15 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முகூர்த்தம் என்பதால் பூக்களின் விலையில் கணிசமான விலையற்றம் உள்ளது. அதிலும் குறிப்பாக மல்லிகைப்பூ உள்ளிட்ட சில பூக்களின் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது,'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT