Published : 28 Jan 2025 01:02 AM
Last Updated : 28 Jan 2025 01:02 AM

ரூ.3,884 கோடிக்கு பிரம்மோஸ் வாங்குகிறது இந்தோனேசியா

புதுடெல்லி: இந்தியாவிடம் இருந்து ரூ. 3,884 கோடி மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தோனேசியா வாங்குகிறது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருக்கிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, வியட்நாம் உட்பட 12-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த சூழலில் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவிடம் இருந்து அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்ய மத்திய அரசுக்கும் இந்தோனேசிய உயர்நிலைக் குழுவுக்கும் இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: உக்ரைன் போர் காரணமாக சர்வதேச நாடுகளின் கவனத்தை பிரம்மோஸ் ஏவுகணை ஈர்த்திருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அதிநவீன ஏவுகணைகளை பயன்படுத்தும் உக்ரைன் ராணுவத்தால், ரஷ்யாவின் பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க முடிகிறது.

ஆனால் ரஷ்யாவின் பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் (பிரம்மோஸ்) ஏவுகணைகளை மட்டும் உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்த முடியவில்லை. உக்ரைன் எல்லைப் பகுதிகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏவுகணை தடுப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளன. இந்த பாதுகாப்பு வளையங்களை தாண்டி பிரம்மோஸ் சீறிப் பாய்கிறது. நிர்ணயித்த இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கிறது. இதன்காரணமாக சர்வதேச அளவில் பிரம்மோஸ் ஏவுகணைக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்திய விமானப் படையின் சுகோய் போர் விமானங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகளை பொருத்த முடிவு செய்யப்பட்டபோது ரஷ்யாவின் உதவி நாடப்பட்டது. ரஷ்ய தரப்பில் ரூ.1,300 கோடி கட்டணம் கோரப்பட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் மத்திய பாதுகாப்பு துறையின் டிஆர்டிஓ அமைப்பு நேரடியாக களத்தில் இறங்கி ரூ.80 கோடி செலவில் சுகோய் போர் விமானங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக பொருத்தியது.

அண்மையில் பிலிப்பைன்ஸ் அரசு, அந்த நாட்டின் கடற்படைக்காக பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கியது. தற்போது சீனாவை குறிவைத்து 4 இடங்களில் பிலிப்பைன்ஸ் கடற்படை பிரம்மோஸ் ஏவுகணைகளை நிறுவியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தோனேசிய அரசு தனது விமானப் படைக்காக ரூ.3,884 கோடி மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான இறுதி கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று வருகிறது. இருநாடுகள் இடையே விரைவில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதன்பிறகு இந்தியா சார்பில் இந்தோனேசியாவின் சுகோய் போர் விமானங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்படும். இதற்கான கடன் உதவியையும் இந்தியாவே வழங்கும்.

இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x