Published : 27 Jan 2025 01:17 PM
Last Updated : 27 Jan 2025 01:17 PM
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட முன்வடிவை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவையில் கடந்த 2023 ஏப்.13 அன்று அறிமுகம் செய்தார்.
மாநில நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு, சாலைகளின் தரம் உயர்த்த உடனடி நீ்ண்டகால திட்டம் தயாரித்தல், பன்னாட்டு நிதியைக் கொண்டு வருவதற்கான மாதிரிகளை உருவாக்குவது ஆகியவை இந்த ஆணையத்தின் பணியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் முன்னோட்டமாக முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் (சிஎம்ஆர்டிபி) கீழ் இருவழிச்சாலைகளை 4 வழிச் சாலைகளாக தரம் உயர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்துக்கு ரூ.246 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரூ.246 கோடி மதிப்பீட்டில், அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆசனூர் - திருக்கோவிலூர் இடையேயான 27 கி.மீ இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்துப் பேசும்போது, “தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களை மத்திய அரசுக்கு செலுத்தி வருகிறோம்.
இதைக்கருத்தில் கொண்டு நம் முதல்வர், ‘4 வழிச்சாலைகளை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் போடுமா? நாம் போட்டால் என்ன?’ என்ற கேள்வியை முன்வைத்து, நாமும் 4 வழிச்சாலை அமைக்கலாமே’ என்ற ஆலோசனையை வழங்கினார். அதன்பேரில், ‘முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை பொறியாளர்களிடம் பேசியபோது, “தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி மூலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வருவாய் ஈட்டி
வருகிறது. அந்த வருவாயை தமிழகத்தில் ஈட்டும் வகையில்தான், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன் முன்னோட்டம்தான் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம்.
எனவே விரைவில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வேளையில், அந்த சாலைகளில் சுங்கச்சாவடிகளை நிறுவி வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மாற்றாக முதமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறதா என அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டபோது, “அப்படியல்ல, தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையான மாநில நெடுஞ்சாலைகளை அமைக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT