Published : 27 Jan 2025 02:15 AM
Last Updated : 27 Jan 2025 02:15 AM

உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் முதலீட்டை ஈர்த்தது இந்தியா

டாவோஸ்: சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை இந்தியா ஈர்த்தது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் 54-வது ஆண்டு கூட்டம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் இந்திய குழுவுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமை தாங்கினார். இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் 5 பேர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பல மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த கூட்டத்தில் இந்தியக் குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் அமைக்கப்பட்ட 2 அரங்குகளில் இந்திய குழு மற்றும் அரசுத் துறைகள் தங்கள் திறனை வெளிப்படுத்தின. அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் கட்சியினர் பங்கேற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது. உலக நாடுகள் பல பிரச்சினைகள் மற்றும் இடையூறுகளை சந்தித்தாலும், ஜனநாயக நாடான இந்தியா நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அமைதி, வளர்ச்சி, அனைத்தும் உள்ளடங்கிய வளர்ச்சி ஆகியவை உள்ள நாடாக இந்தியா உள்ளது என்பது நாங்கள் உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தினோம். இதனால் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் முதலீடுகளுக்கான உறுதியை நாங்கள் பெற்றுள்ளோம். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் மிகவும் பயனடைந்த மாநிலம் மகாராஷ்டிரா. மொத்த முதலீட்டில் 80 சதவீதத்தை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிரா ஈர்த்தது. ரூ.15.70 லட்சம் கோடி மதிப்பில் 61 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மகாராஷ்டிரா கையெழுத்திட்டது. இதன் மூலம் 16 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலங்கானா குழு ரூ.1.79 லட்சம் கோடி மதிப்பிலான 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதன் மூலம் 50,000 வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த முதலீடுகள் பசுமை எரிசக்தி, அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தரவு மையங்களில் தொடர்பானவை.

கேரளாவில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் கேரள தொழிற்துறை அமைச்சர் ராஜீவ், தொழிலதிபர்களுடன் 30-க்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தினார். 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டவுள்ளதாக உத்தர பி ரதேசம் தனது தொலை நோக்கு திட்டத்தை தெரிவித்து முக்கிய முதலீடுகளை ஈர்த்தது. சர்வதேச பானங்கள் தயாரிப்பு நிறுவனமான ஏபி இன்பெவ், பல மாநிலங்களில் 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்யப் போவதாக தெரிவித்தார். இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் தெலங்கானாவில் 2 புதிய உற்பத்தி ஆலைகளை தொடங்கவுள்ளது.

இது தவிர பல சர்வதேச நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்கவுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x