Published : 25 Jan 2025 07:48 PM
Last Updated : 25 Jan 2025 07:48 PM

3.4 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த பிஎஸ்என்எல்; புதிதாக 12 லட்சம் பேரை வசப்படுத்திய ஜியோ!

புதுடெல்லி: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலையேற்றம் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை முதல் அதிக அலைப்பேசி பயனர்களைப் பெற்று வந்த அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், 4 மாதங்களுக்கு பின்பு சந்தாதாரர்களை இழக்கத் தொடங்கியுள்ளதாக ட்ராய் (Telecom Regulatory Authority of India) தரவுகள் தெரிவிக்கின்றன.

12 லட்சம்

முந்தைய நான்கு மாதங்களாக தொடர்ந்து அதிக சந்தாதாரர்களை பெற்று வந்த அரசு தொலைத் தொடர்பு நிறுவனம், நவம்பர் மாதத்தில் மட்டும் 3,44,473 பயனர்களை இழந்துள்ளது. மற்ற தொலைத்தொடர்பு சேவைகளை விட குறைவான கட்டணம் என்ற பலனால் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் பிஎஸ்என்எல் 70 லட்சம் பயனர்களைப் பெற்றது. எனினும், மோசமான சேவைத் தரம், இந்தியா முழுவதும் 4 ஜி சேவை இல்லாதது போன்ற காரணங்களால் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களை இழக்கத் தொடங்கியது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த நவம்பர் மாதத்தின் தரவுகளின்படி, பிஎஸ்என்எல் 92.05 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

இதனிடையே, சந்தையில் முன்னணியில் இருக்கும் ஜியோ ரிலையன்ஸ், கட்டண உயர்வு, சிம்கார்டுகள் ஒருங்கிணைப்பில் குளறுபடிகள் போன்றவை காரணமாக நான்கு மாதங்களாக சரிவில் இருந்த போக்கில் இருந்து மீண்டு, 12 லட்சம் சந்தாதாரர்களை புதிதாகப் பெற்றுள்ளது. நவம்பர் மாத இறுதியில் ஜியோ 461.2 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. பாரதி ஏர்டெல் இந்தக் காலகட்டத்தில், 10 லட்சத்து 14 ஆயிரம் சந்தாதாரர்களை இழந்திருந்தது. எனினும், நவம்பர் இறுதியில் அதன் சந்தாதரர்களை 384.3 மில்லியனாக உயர்த்தியுள்ளது.

வோடபோன் - ஐடியா தொடர்ந்து இழப்பில் இருந்து வருகிறது. அந்நிறுவனம், ஜூலை - அக்டோபர் கால கட்டத்தில் 15 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து, 208.9 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

ட்ராயின் தரவுகளின்படி, ஒட்டுமொத்தமாக அலைப்பேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை நவம்பரில் 1.76 மில்லியன் குறைந்து, 1.148 மில்லியனாக உள்ளது. இதில் ஜியோவின் சந்தை பங்கு 40.15 சதவீதமாகவும், ஏர்டெல் 33.45 சதவீதமாகவும் உள்ளன. அதனைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா 18.19 சதவீதம் மற்றும் பிஎஸ்என்எல் 8.03 சதவீதம் சந்தைப் பங்குகளைக் கொண்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x