Published : 24 Jan 2025 08:21 PM
Last Updated : 24 Jan 2025 08:21 PM

ஐபோன், ஆண்ட்ராய்டு போனில் வெவ்வேறு கட்டணம் வசூலா? - ஓலா, உபர் மறுப்பு

புதுடெல்லி: பயணங்களுக்காக முன்பதிவு செய்யும்போது பயணிகளின் அலைப்பேசி மாடல்களின் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயம் செய்வதில்லை என்று ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பயனர்களின் அலைபேசி மாடல்களின் அடிப்படையில் கட்டணங்கள் வித்தியாசப்படுவதாக கூறி அரசு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறார்களா என்பதைப் பொறுத்து, ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் ஒரே மாதிரியான சேவைகளுக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority) நடவடிக்கையில் இறங்கியது. இது குறித்து ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "நாங்கள் எங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டண சேவைகளையே வைத்துள்ளோம்.

ஒரே மாதிரியான சவாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் அலைபேசிகளின் அடிப்படையில் கட்டணங்கள் நிர்ணயிப்பதில்லை. இதனை இன்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளோம். இது தொடர்பான தவறான புரிதல் தொடர்பாக இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் உபர் நிறுவனம், "வாடிக்கையாளர்களின் அலைப்பேசிகளின் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயிப்பதில்லை. இது குறித்த தவறான புரிதல் தொடர்பாக நாங்கள் CCPA-வுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய நுகர்வோர் நலத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வியாழக்கிழமை கூறுகையில், "பயணங்களுக்கு முன்பதிவு செய்யும்போது வேறுபட்ட கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுவது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. உணவு விநியோகம், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு போன்றவற்றுக்கும் வித்தியாசமான கட்டணம் நிர்ணயிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம் இந்த வித்தியாசமான விலை நிர்ணயம் நியாமற்ற வணிக செயல்பாடு என்றும், இது நுகர்வோரின் உரிமைகளை முற்றிலும் புறக்கணிக்கும் செயல் என்றும் தெரிவித்திருந்தார். டெல்லியைச் சேர்ந்த தொழில்முனைவர் ஒருவர், இரண்டு வெவ்வேறு செயலிகளில், இருவேறு மாடல் அலைப்பேசிகளில் ஒரே சேவைக்கு கட்டணங்கள் மாறுபடுவதை தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து வந்தததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டிசம்பர் மாதத்தில் பயனர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், உபர் செயலியில், ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு வேறு வேறு மாடல் போனில் இரண்டு விதமான கட்டணங்கள் காட்டப்பட்டதை பகிர்ந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் தீவிரமானது. அந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து முன்பதிவு செய்யப்படும் அலைப்பேசி சாதனங்களின் அடிப்படையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் குற்றச்சாட்டினை உபர் நிறுவனம் மறுத்திருந்தது. அந்நிறுவனம், புறப்படும் இடம், பயணத்துக்கான நேரம், சென்று சேறும் இடம் ஆகியவைகளைப் பொறுத்தே கட்டணம் மாறுபடும், பயணிகள் பயன்படுத்தும் அலைப்பேசிகளின் அடிப்படையில் கட்டணங்கள் நிர்ணயிப்பதில்லை என்று விளக்கம் அளித்திருந்தது.

இருப்பினும் பிற சமூக ஊடக பயனர்களும் இந்த விலை நிர்ணய வேறுபாடு கோஷத்தில் கலந்து கொண்டனர். ஒரே தூரம் கொண்ட பயணத்துக்கு ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் விலைகள் மாறுபடுதை பதிவு செய்து குற்றம்சாட்டி வந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x