Published : 22 Jan 2025 05:24 PM
Last Updated : 22 Jan 2025 05:24 PM
சென்னை: மகளிர் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட இயந்திர வாடகை மையங்கள் மூலம் ரூ.1.14 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பண்ணை சார்ந்த செயல்பாடுகளுக்கு பயிற்சி வழங்குதல், குழுக்கள் உருவாக்குதல், தொகுப்பு நடவடிக்கைகள் மூலம் சிறந்த பண்ணை செயல்பாடுகளை மேற்கொண்டு அதிக மகசூல் மற்றும் உரிய விலைபெற நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண் விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகளின் மேம்பாட்டுக்காக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் கருவி வங்கிகள் நிறுவப்பட்டன. விவசாய கருவிகள் மற்றும் உபகரணங்களை மலிவு விலையில் வாடகைக்கு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்த மையங்கள் விவசாய செலவுகளை குறைப்பதுடன், தரிசு நிலங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் உதவி வருகின்றன.
அதன்படி இந்த மையங்கள் வழியாக டிராக்டர்கள், கதிர் அறுக்கும் இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள், வைக்கோல் கட்டு இயந்திரங்கள் போன்ற வேளாண் இயந்திரங்கள் வெளிச்சந்தையை விட குறைவான வாடகைக்கு மகளிர் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இதன்மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான கருவிகளை குறைந்த செலவில் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தவகையில் தமிழகம் முழுவதும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் 32 மாவட்டங்களில் 251 இயந்திர வாடகை மையங்கள் மற்றும் 2,605 கருவி வங்கிகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதன்மூலம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் ரூ.1.14 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT